தமிழை ஆட்சி மொழியாகவும், திருக்குறளை தேசிய நூலாகவும் அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில், தென்மாநில முதல்வர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் ஸ்டாலினால் நேரடியாக கலந்து கொள்ள இயலவில்லை. அதனால், தமிழகப் பிரதிநிதியாக அமைச்சர் பொன்முடி சென்றிருந்தார். அவர் முதல்வர் ஸ்டாலினின் உரையை அங்கு வாசித்தார்.
முதல்வர் ஸ்டாலின் உரையில் தமிழ் மொழி குறித்து இடம்பெற்ற தகவல்கள் வருமாறு:
தமிழகம் அதன் பழம்பெரும் கலாச்சாரத்திற்கும், வளமான பாரம்பரியத்திற்கும் பெயர் பெற்றது. தமிழக மக்கள் தங்களின் மொழியைப் பெருமித அடையாளமாகக் கருதுகின்றனர். நமது பிரதமரும் கூட தனது உரைகளில் தமிழ் இலக்கியங்களில் இருந்து மேற்கோள்களைச் சுட்டிக் காட்ட மறப்பதில்லை.
இந்தியாவின் செம்மொழிகளில் முதன்முதலாக அந்த அந்தஸ்தைப் பெற்றதும் தமிழ் மொழி தான். உலகின் பழமையான மொழி, வளமான மொழி என்ற வகையில் தமிழ் மொழி ஏற்கெனவே இலங்கை, சிக்கப்பூர் நாடுகளில் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மலேசியா, தென் ஆப்பிரிக்காவில் சிறுபான்மை மொழியாகவும் உள்ளது.
இந்நிலையில் செம்மொழியாம் தமிழ் மொழியை மத்திய அரசு தேசத்தில் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். மேலும், திருக்குறளை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம். ஏனெனில் திருக்குறள் ஞானத்தின் ஊற்று.
இவ்வாறு முதல்வர் உரையில் தமிழ் மொழி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.