நியூசிலாந்து அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2021 ரி20 உலகக்கிண்ணத்தை அவுஸ்திரேலியா அணி சுவீகரித்துள்ளது.
ரி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டி இன்று டுபாயில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட நியூசிலாந்து அணிக்கு அழைப்பு விடுத்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 85 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் ஹேசில்வுட் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 173 ஓட்டங்களைப் பெற்று வெற்றி கிண்ணத்தை தனதாக்கியது.
அவுஸ்திரேலியா அணி சார்பில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய மிட்சல் மார்ஸ் 77 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
6 நான்கு ஓட்டங்கள் மற்றும் 4 ஆறு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
டேவிட் வோர்னர் 53 ஓட்டங்களையும் கிளேன் மெக்ஸ்வல் ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
பந்து வீச்சில் நியூசிலாந்து அணி பந்துவீச்சாளர் எவரும் பிரகாசிக்காத நிலையில் ட்ரன்ட் போட்ல் மாத்திரம் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதற்கமைய, ரி20 உலகக்கிண்ண வரலாற்றில் அவுஸ்திரேலியா அணி தனது முதலாவது உலகக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.