தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துக்கொள்ள வேண்டாம் என்று அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெய் பீம்’. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர். விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமான காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி, அது தொடர்பான அறிக்கையை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருந்தார். அதில் படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் இன்னொரு சமுதாயத்தை, இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை என்று அன்புமணி கூறியிருந்தார்.
அவரது அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் விளம்பரத்துக்காக யாரையும் அவமதிக்க வேண்டிய தேவை எனக்கில்லை என்று விளக்கம் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ‘ஜெய் பீம்’ படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் கோரி வன்னியர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் மூலம் நேற்று சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் நேற்று அறிக்கை ஒன்றை வெளிட்டது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:’சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜெய் பீம்’ படம் அதிகாரத்துக்கு எதிரான மக்களின் போர்க்குரலாக உலகமெங்கும் ஒலிக்கிறது. படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பும் அங்கீகாரமும்தான் இந்த மண்ணில் மாற்றம் நிகழும் என்பதற்கான நம்பிக்கை. அதே நேரம் படத்துக்கு எதிரான கருத்துகளை ஒரு சிலர் திட்டமிட்டுப் பரப்பி வருவதையும் கவனிக்கிறோம். சூர்யாவுக்கு எதிராகப் பேசப்படும் நியாயமற்ற விஷயங்களை அறம் சார்ந்த இந்தச் சமூகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. அதனால் எப்போதும் போல் நாம் பொறுமையாக இருப்பதுதான் சிறப்பு.
சூர்யா, எந்த சாதி மத வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவர் என்பதை இந்த நாடு நன்கறியும். அதனால் எவருக்கும் விளக்கமோ பதிலடியோ கொடுக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. கட்டுப்பாடும் பொறுமையும் கொண்ட நம் மன்றத்தினர் பேச்சாகவோ சமூக வலைதளப் பதிவுகளாகவோ எவ்வித எதிர்வினையும் ஆற்ற வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். ‘தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துக்கொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்குச் செலவிடுங்கள். சமூகம் பயன் பெற சூர்யா நமக்குக் கற்பித்த பாதையில் பயணிப்போம்”.
இவ்வாறு அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் தெரிவித்துள்ளது.