இனப் பலம்தான் எமது தேசத்தையும் மக்களையும் பாதுகாத்து ஆட்சி உரிமையை வழங்குவதற்கான அத்திவாரமாக இருக்கக்கூடும் என்று, தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
சிங்கள குடியேற்றங்களுக்கு எதிராக, வவுனியா வடக்கில் நேற்று இடம்பெற்ற போராட்டத்தில் பங்கேற்றபோதே அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார். மேலும், தமிழர்களின் பாரம்பரிய தேசம் கடந்த 70 ஆண்டுகளாகவும், இப்போதைய ஆட்சியினாலும், சிங்கள குடியேற்றங்களாலும், ஆக்கிரமிப்புக்களாலும் மாற்றியமைக்கப்படுகிறது.
தமிழர்களின் பெரும்பான்மை இனப் பிரதிநிதித்துவம், இனப் பரம்பல் சீர்குலைக்கப்பட்டு, அவர்களின் இன அடையாளம் அழிக்கப்படும் நடவடிக்கை இப்போதைய காலப் பகுதியில் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.
தமிழ் மக்களின் தேசம் , கலாசாரம், மதம் எல்லாமே பௌத்த – சிங்கள மயமாக்கப்பட்டு, தமிழ் மக்களை அழிக்கின்ற – தமிழ் தேசத்தை அழித்து விடுகின்ற நடவடிக்கையை இந்த ஆட்சியும் செய்து வருகிறது. அதனைவிட, தமிழ் பிரதேசங்களோடு அயலில் இருக்கின்ற சிங்கள கிராமங்களை இணைப்பதன் மூலம், தமிழர்களின் பெரும்பான்மையை அழித்து, சீர்குலைத்து “தமிழ் இனம்” என்கிற அந்தப் பதத்தை அல்லது இனப் பரம்பலையே இல்லாமல் செய்கிற நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. “கோட்டாபய ஆட்சியில், தமிழர்களுடைய தேசம் சிங்கள மயமாக்கப்பட்டு, பௌத்த தேசமாக்கப்படுவதற்கு எதிராக நாம் தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டியதுடன், தமிழின அடையாளங்களையும் பாதுகாக்க வேண்டிய கட்டத்தில் இருக்கின்றோம்” என்றார்.