புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் திகதி அறிவித்துள்ளது.
கொவிட்19 தொற்று நிலைமை காரணமாக பல முறை ஒத்திவைக்கப்பட்ட இம்மனு நேற்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனெக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்த்தன, எல்.டி.பீ.தெஹிதெனிய, முர்து பெர்னாண்டோ, எஸ்.துரைராஜா
மற்றும் காமினி அமரசேகர ஆகிய ஏழு பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் நீதியரசர்கள் குழாமின் உறுப்பினர்களான பிரியந்த ஜயவர்த்தன மற்றும் காமினி அமரசேக்கர ஆகிய நீதியரசர்கள் தனிப்பட்ட காரணத்திற்காக இந்த மனு விசாரணையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து மனு மீதான விசாரணையை எதிர்வரும் வருடம் மார்ச் மாதம் 15,16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மேற்கொள்ள நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், கத்தோலிக்க ஆயர்கள் மற்றும் குண்டுத்தாக்குதல் காரணமாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட 11 பேரினால் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.