தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கிணற்றில் கார் பாய்ந்து தந்தை, மகள் உயரிழந்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் ஜலகண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் வீரன்(40). இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவர் மனைவி, மேட்டூர் பகுதியை சேர்ந்த உமா(35). இவர்களின் மகள் சுஷ்மிதா.
சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்த இவர்கள் நேற்று (17-ம் தேதி) மாலை காரில் பெங்களூரு சென்று கொண்டிருந்தனர்.
தருமபுரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காரிமங்கலம் வட்டம் பெரியாம்பட்டி அருகே பொன்னேரி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர விவசாய நிலத்தில் இருந்த கிணற்றில் பாய்ந்தது. கிணற்றில் விழும்போது காரின் கதவு திறந்து வீரனின் மனைவி உமா மட்டும் வெளியில் விழுந்தார்.
வீரன் மற்றும் அவரது மகள் ஆகிய இருவரும் காருடன் கிணற்றில் மூழ்கினர். உமா சிறு காயங்களுடன் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கிணற்றில் 40 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்த நிலையில் தண்ணீரை வெளியேற்றி விட்டு காரை மீட்கும் பணியில் பாலக்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர்.
சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு கிணற்றில் இருந்து கார் மீட்கப்பட்டது. வீரன், சிறுமி சுஷ்மிதா ஆகிய இருவரும் காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீஸார் விசாரிக்கின்றனர்.