சிறந்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 43.7 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
உத்தர பிரதேசம், உத்தரா கண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் அடுத்து வரும் மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஏபிபி-சிவோட்டர்-ஐஏஎன்எஸ் சார்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் சிறந்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து மக்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டன.
மணிப்பூர் மாநிலத்தில் 57.5 சதவீதம் பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்தனர். உத்தராகண்டில் 50.1 சதவீதம் பேரும் உத்தர பிரதேசத்தில் 44.4 சதவீதம் பேரும் கோவாவில் 36.1 சதவீதம் பேரும் பஞ்சாபில் 14.3 சதவீதம் பேரும் நரேந்திர மோடியை ஆதரித்தனர். ஐந்து மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சராசரியாக 43.7 சதவீதம் ஆதரவு அளித்துள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மன்மோகன் சிங், ராகுல், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் ஆகியோரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த 5 மாநிலங்களை சேர்ந்த மக்களின் ஆதரவு குறைவாக உள்ளது.
ராகுல் காந்திக்கு 9.6 சதவீதம் பேரும் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு 5.2 சதவீதம் பேரும் மன்மோகன் சிங்குக்கு 3.1 சதவீதம் பேரும், யோகி ஆதித்யநாத்துக்கு 2.6 சதவீதம் பேரும் ஆதரவு அளித் துள்ளனர்.
-பிடிஐ