சகலதும் நன்மைக்கு ஏதுவாக நடத்தும் தேவன்.
சகோதரன் பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ரோமர் 8:28.
மேலே வாசித்த வேதவசனத்தின் உண்மைக் கருத்தை நன்கு விளங்கிக் கொள்ளும் படியாக ஓர் பழைய கதையை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ஒரு அரசனுக்கு எல்லாம் நன்மைக்கே என்று எப்போதும் கூறும் தேவபக்தியுள்ள ஒரு மந்திரி இருந்தான். ஒருநாள் அரசனின் கையில் கத்தி வெட்டியது. உடனே மந்திரி எல்லாம் நன்மைக்கே என்று கூறினான். அரசன் கோபத்துடன் ஏசிவிட்டான். அன்று மாலை அரசன் வேட்டையாட தனிமையில் காட்டிற்குப்போனான்.
தனித்துக்காணப்பட்ட அரசனை ஆதிவாசிகள் பிடித்து பலிசெலுத்தும்படியாக மரமொன்றில் கட்டிவைத்தனர். பலிசெலுத்தும் வேளைவந்ததும் அரசனின் கையில் காணப்பட்ட காயத்தைக் கண்டதும், இரத்தம் சிந்தப்பட்ட மனிதனை பலி செலுத்தக்கூடாது என்றுகூறி அவிழ்த்து விட்டனர். அரண்மனைக்கு திரும்பி வந்த அரசன், மந்திரியை வரவளைத்து மன்னிப்புக் கேட்டான். அப்போது மந்திரி, அரசே, நீர் என்னை ஏசிவிரட்டியதும் நன்மைக்கே. உம்முடன் வந்ததின் நிமித்தம் அவர்கள் என்னை பலி கொடுத்திருப்பார்களே. வராததினால் நான் பிழைத்துக்கொண்டேன் என்றான்.
ஆதியாகமம் அதிகாரம் 40-50 வரை கூறப்பட்ட யோசேப் என்கிற மனிதனின் வாழ்க்கையை நாம் அறிந்து கொள்ளும்போது, அவர் தனிமை, பிரிவு, ஏமாற்றம், கொலை மிரட்டல், அபாண்ட குற்றச்சாட்டு, அநியாய சிறைவாசம் என பல சோதனைகளுக்குமேல் சோதனைகளை அனுபவித்தார். இத்தனைக்கும் மத்தியில் அவர் தேவன்மேல் கோபமோ, மனிதர்மேல் கசப்போ கொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவர் தனது வாழ்வில் நடந்த அத்தனை அனுபவங்களும் நன்மைக்கே என்ற கண்ணோட்டத்தில் பார்க்க கற்றுக்கொண்டிருந்தார். அதன் காரமாக ஆண்டவர் அவரை உயர்த்தி, அவரது கடந்த கால அனுபவங்களை அவருக்கும் மற்றவர் களுக்கும் ஆசீர்வாதமாக மாற்றிக் கொடுத்தார்.
நாம் அமர்ந்திருந்து கடந்த காலங்களை சற்றுசிந்தித்துப் பார்க்கும்போது எமது மனக்கண்களுக்கு முன்வருவது என்ன? எதிர்பார்த்து காத்திருந்த நிறைவேறாத காரியங்களா? அல்லது அத்தனைக்கும் மத்தியிலும் அடைந்த நன்மையும் ஆறுதலுமா?
தாவீது என்பவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் தேவன் அவரை அரசனாக தெரிந்தெடுத்தார். ஆனால் உடனடியாக அரசனாக முடிசூட்டப் படவில்லை. அதேநேரம் தனது உயிரைக்காக்க காடுகளுக்குள் ஓடி ஒழிய வேண்டியிருந்தது. ஊர் ஊராய் அலைய வேண்டியிருந்தது. இத்தனைக்கும் மத்தியில் தேவனுக்குப் பிரியமான மனிதன் எனப்பெயர் பெற்றவர். அப்படியிருந்தும் வாழ்க்கையில் பல போராட்டங்கள் இன்னல்கள். அவர் தளர்ந்து போகவில்லை.
ஒவ்வொருதடவையும் தன்னை வழிநடத்தி வந்த கர்த்தரின் வழிகளை நினைத்து தேவனுக்கு நன்றிக்கீதம் பாடினார். கர்த்தருடைய மகிமையை நினைத்து மகிழ்ந்தார். என்ன நேர்ந்தாலும் தான் விசுவாசிக்கும் தேவன் தனக்காகயாவையும் செய்து முடிப்பார் என்று விசுவாசத்தோடு அறிக்கையிட்டார். அவரின் அறிக்கையின் பாடல்தான் இது.
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார். கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது. உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக. சங்கீதம் 138:8.
அருமையான அலைகள் வாசக நேயர்களே, கர்த்தருடைய அன்பும் கிருபையும் ஒருபோதும் மாறாது. அதை அறிந்தும் அல்லது அறியக்கூடிய வழியிருந்தும் உனது முறுமுறுப்புக்களினாலும், உன் அவவிசுவாச வார்த்தையாலும், அர்த்தமற்ற கேள்வி களாலும் தேவனை துக்கப்படுத்துகிறாயா? அப்படியாயின் இன்று அவரின் கிருபையையும் வழிநடத்தலையும் நோக்கிப்பார். தேவனிடத்தில் உன் விசுவாசம் வளர உன்னை ஒப்புக்கொடு. தேவனை ஆராதிக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் உன் இருதயத்தை நிரப்பு. அப்போது இதுவரை நடத்தியவர் இனிமேலும் சகலத்தையும் நன்மைக்கு நடத்துவார் என்ற நிச்சயத்தைப் பெற்றுக் கொள்வாய். அந்த நிச்சயம் வாழ்வில்வரும் சகல பயங்களிலும் தோல்விகளிலும் இருந்து வெற்றியைத்தரும். இந்த வெற்றி வாழ்வை அடைந்து கொள்ள இந்த ஜெபத்தை என்னுடன் சோர்ந்து தேவனிடம் அறிக்கைபண்ணு.
அன்பின் பரலோக பிதாவே, இன்று வாழ்வின் தோல்விகளினால் சோர்ந்து போயிருந்த எனக்கு, அவைகளின் மத்தியில் ஆறுதலையும், வெற்றியையும் உம்மில் அன்பு செலுத்துவதின்மூலம் உம்மிடத்தில் இருந்து அடைந்து கொள்ள முடியும் என்பதை எனக்கு அறியப்படுத்தியதற்காக உமக்கு நன்றி அப்பா. என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கிறேன். காத்து வழிநடத்தும் படியாக வேண்டிக் கொள்கிறேன் நல்ல பிதாவே, ஆமென்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!