மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை பாகிஸ்தான் பயங்கரவாத கும்பல் நடத்திய கோர தாக்குதலை யாரும் மறந்துவிட முடியாது. பயங்கரவாதிகளால் மும்பை ரத்த சகதியாக மாறிய தினம் இன்று.
பாகிஸ்தானில் இருந்து வந்தனர்
நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவில் 10 பயங்கிரவாதிகளால் நடத்தப்பட்ட அந்த தாக்குதலால் இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகமே அதிர்ச்சியில் உறைந்து போனது.
2008-ம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதி 10 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து படகில் வந்தனர். அவர்கள் வரும் வழியில் மீனவர்களை கொலை செய்து அவர்களின் படகில் மும்பைக்கு வந்தனர். அவர்கள் சுற்றுலா பயணிகள் போல மும்பை கப்பரடே, பத்வார் பார்க் பகுதியில் கரை ஏறினர். பின்னர் அவர்கள் குழுக்களாக பிரிந்து தென்மும்பையில் உள்ள முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தினர்.
குருவிகளை போல சுட்டு தள்ளினர்
இதில், பயங்கரவாதிகள் அஜ்மல் கசாப் மற்றும் அபு இஸ்மாயில் மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில்நிலையத்தில் நடத்திய தாக்குதலை இன்று நினைத்து பார்த்தாலும் நெஞ்சை பதறவைக்கும் அளவுக்கு கொடூரமானது. அவர்கள் ரெயில் நிலையத்தில் நின்றுகொண்டு இருந்த அப்பாவி பயணிகள், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என கண்ணில் பட்டவர்களை காக்கா, குருவிகளை போல ஈவு இரக்கமின்றி கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளினர். 15 நிமிடங்களில் அவர்கள் 58 பேரை கொன்று குவித்தனர். இந்த தாக்குதலில் 104 பேர் படுகாயமடைந்தனர்.
சி.எஸ்.எம்.டி. தவிர பயங்கரவாதிகள் தென்மும்பையில் உள்ள பிரபலமான ஒபராய் டிரிடென்ட் ஓட்டல், தாஜ் ஓட்டல், லியோபோல்டு கபே, காமா ஆஸ்பத்திரி, நரிமன் ஹவுஸ் ஆகிய இடங்களிலும் தாக்குதல் நடத்தினர். இதேபோல அவர்கள் போலீஸ் வாகனத்தை கடத்தியும் தாக்குதலில் ஈடுபட்டனர். மஜ்காவ், வில்லேபார்லேவில் வெடிகுண்டுகளையும் வெடிக்கச்செய்தனர்.
இதில் லியோபோல்டு கபேயில் 11 பேரும், டிரிடென்ட் ஓட்டலில் 30 பேரும், தாஜ் ஓட்டலில் 31 பேரும், நரிமன் ஹவுசில் 7 பேரும் பயங்கரவாதிகள் நடத்திய கோர தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலில் போலீசார் உள்பட 175 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 320-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
அஜ்மல் கசாப்
தாக்குதலை நடத்திவிட்டு தப்பி செல்ல முயன்ற பயங்கரவாதி அஜ்மல் கசாப்பை மட்டும் போலீசார் உயிருடன் பிடித்தனர்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துக்காராம் ஒம்லே தனது உயிரை கொடுத்து அஜ்மல் கசாப்பை உயிரோடு பிடிக்க உதவினார். மற்ற பயங்கரவாதி்கள் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டனர்.
இதேபோல அஜ்மல் கசாப்பும் கடந்த 2012-ம் ஆண்டு புனே ஏரவாடா ஜெயிலில் தூக்கிலிடப்பட்டார்.
ஆறா வடு
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்திற்கு கடந்த ஆண்டு வேறு ஒரு வழக்கில் பாகிஸ்தான் கோர்ட்டு 10 ஆண்டு ஜெயில் தண்டனை அளித்து உள்ளது.
இந்தநிலையில் மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் நடந்து இன்றுடன் 13 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அது ஏற்படுத்திய காயம் மும்பை மட்டும் இன்றி ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஆறா வடுவாகவே உள்ளது.
மும்பையில் 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நவீன ஆயுதங்கள் மும்பை போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. போலீசார் மட்டுமின்றி முப்படைகளும் மும்பையை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதனால் தற்போது மும்பை பாதுகாப்பான நகரமாக மாறி உள்ளது. எனினும் பயங்கரவாதிகளின் கழுகு பார்வை மும்பையின் மீது நீடிக்கத்தான் செய்கிறது.