காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் செயற்பாடுகளை சீர் குலைத்தது கடந்த நல்லாட்சி அரசாங்கமே என ஆளும் கட்சி எம்.பி சுரேன் ராகவன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
காணாமற் போனோர் 450 பேரின்முறைப்பாடுகள் தமிழில் காணப்பட்ட நிலையில் அதனை மொழிபெயர்ப்பு செய்வதை கூட அன்றைய அரசாங்கம் தட்டிக்கழித்ததாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.
காணாமற்போனோர் அலுவலகம் 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 2017 ஆம் ஆண்டிலேயே அதன் செயற்பாடுகள் சீர் குலைக்கப்பட்ட தாகவும் அதில் முக்கிய பங்கு தற்போதைய எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்லவினது என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, வெகுசன ஊடக அமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்கள் தொடர்பான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்:
அரசாங்கம் சிறந்த வெளிநாட்டு கொள்கையை கொண்டுள்ளது. அதற்கிணங்க எமது தாய் நாட்டில் உள்ள அனைத்து இன, மத மக்களினதும் அபிப்பிராயத்தை பெற்றுக்கொண்டு சுயாதீனமான கொள்கையொன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
எமது வெளிநாட்டு அமைச்சின் செயற்பாடுகள் நவீனமயப்படுத்தப் பட வேண்டியது காலத்தின் தேவையாகும். 67 வெளிநாட்டுத் தூதரகங்கள் பல்வேறு நாடுகளிலும் இயங்குகின்ற நிலையில் அதன் செயற்பாடுகள் எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு பலம் சேர்க்கும் செயற்பாடாக அமைய வேண்டும். ஒவ்வொரு வெளிநாட்டு தூதரகம் மூலமாகவும் வருடாந்தம் 50 மில்லியன் அமெரிக்கன் டொலர் முதலீடுகளை இலங்கைக்கு பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயற்பாடுகள் மக்களுடன் நெருங்கிய தாக அமைய வேண்டும். அடிமட்டத்தில் உள்ள மக்களும் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் அரசாங்கம் கொண்டுள்ள கருத்தை தெரிந்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெனிவா மனித உரிமைப் பேரவை தொடர்பில் குறிப்பிடும்போது ஜெனிவாவுக்கு அரசாங்கம் வழங்கும் பதிலை மார்ச் மாதம் வரை தாமதிக்காமல் ஏற்கனவே அதனை தயார் செய்து கொள்ள வேண்டும்.அது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துவது அவசியம்என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.