அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் மீண்டும் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியதன் காரணமாக, அந்த மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் சமீபகாலமாக கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் 6 ஆயிரத்து 200 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இது தினசரி பாதிப்பு விகிதம் 3.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும் அன்று ஒரு நாளில் மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சராசரியாக ஒரே நாளில் 300க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் படுகிறார்கள்.
மேலும் கொரோனா நோய் பரவாமல் தடுக்கும் பொருட்டு நியூயார்க் மாகாணத்தில் பேரழிவு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாகாண கவர்னர் கேத்தி ஹோசுல் பிறப்பித்துள்ளார். மேலும் அவரின் அந்த உத்தரவில், நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதோடு, முன்னெச்சரிக்கை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.