அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகார் ஆதாரமற்றது என்று பெங்களூரு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
‘நிபுணன்’ படத்தில் நடித்தபோது, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜுன் மீது கடந்த 2018ஆம் ஆண்டு# MeToo இயக்கத்தின் மூலம் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு நடிகர் அர்ஜுன் மறுப்பு தெரிவித்தார். இது தொடர்பாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அதில் பங்கேற்ற அர்ஜுன், தான் சமரசமாக போகத் தயாரில்லை என தெரிவித்து ரூ.5 கோடி கேட்டு நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகாரின் பேரில், நடிகர் அர்ஜூன் மீது 4 பிரிவுகளில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில் புதிய திருப்பமாக அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகார் அடிப்படை இல்லாதது என்று பெங்களூரு போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வலியுறுத்தி ஸ்ருதி ஹரிஹரனுக்கும் போலிஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த வழக்கில் அர்ஜுன் மீது எந்த தவறும் இல்லை என்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவும் தீர்மானித்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.