விஜயகாந்த் நடித்த ‘மாநகர காவல்’ படத்தின் இயக்குநர் எம்.தியாகராஜன் காலமானார். ஏ.வி.எம் ஸ்டுடியோவுக்கு எதிரில் உள்ள பிளாட் பாரத்தில் அனாதைப் பிணமாகக் கிடந்தார்.
90 களில் பிரபல இயக்குனராக இருந்தவர் எம்.தியாகராஜன் . இவர் பிரபு நடித்த வெற்றி மேல் வெற்றி, ஏவி.எம்.ன் 150 வது படமான விஜயகாந்த் நடித்து பிரபலமான மாநகர காவல் ஆகிய படங்களை இயக்கினார். அன்று ரசிகர்கள் மத்தியில் வெற்றி கண்ட இந்த படம் விஜகாந்திற்கு ஒரு திருப்பு முனையாகவே இருந்தது என்றே சொல்லலாம்.
சினிமாவை நம்பி வரும் பெரும்பாலானோர் போலவே இவரும் ஒரு கிராமத்திலிருந்து தான் வந்துள்ளார். தியாகராஜன் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர். ஊரில் நல்ல அந்தஸ்தை கொண்ட மிகப்பெரிய குடும்பத்தை சேர்ந்தவர். டிஎப்டி படித்த மாணவரான தியாகராஜன் ஆரம்ப காலகட்டத்தில் அவரது சொந்த ஊர் அருகே விபத்தில் அடிபட்டு கோமாவிலிருந்து பிழைத்து மீண்டும் கோடம்பாக்கத்தை நம்பி வந்தவர்.
பின்னர் ஒரு வழியாக சினிமா வாய்ப்பு கிடைக்க பிரபுவின் வெற்றிக்கு மேல் வெற்றி மற்றும் விஜயகாந்தின் மாநகர காவல் உள்ளிட்ட படங்களை இயக்கினார். 90 களுக்கு பிறகு இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். இவர் இயக்கிய இந்த இரண்டு படங்களும் அன்றைய காலகட்டத்தில் நல்ல வசூலை பெற்றுக்கொடுத்தும் ஏன் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்பது புரியாத புதிராகவே உள்ளது.
பின்னர் ஊருக்கு திரும்ப மனமின்றி சென்னை வடபழனியில் அழுக்கான உடையோடு கையில் செய்திதாளோடும் அம்மா உணவத்தின் ஆதரவிலும் வாழ்ந்து வந்தார் தியாகராஜன்.
ஏ.வி.எம் க்கு வெற்றி படங்களை தந்த இயக்குனர் தியாகராஜன் அந்த ஸ்டுடியோவையே பல வருடமாக சுற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை ஏ.வி.எம் ஸ்டுடியோவுக்கு எதிரில் உள்ள பிளாட் பாரத்தில் அனாதை பிணமாக கிடந்துள்ளார் தியாகராஜன். தகவல் அறிந்து வந்த சென்னை மாநகர போலீசார் ஆம்புலன்ஸ் வரவழைத்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு இயக்குனரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.