கிராமத்தில் சொந்தமாக நிலம் வைத்து அதில் விவசாயம் செய்து வருகிறார் முத்துப்பாண்டி (சமுத்திரக்கனி). அவரது மகள் ஐஸ்வர்யா (பூஜா கண்ணன்). மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் தன் மனைவியைக் காப்பாற்ற முடியாமல் போன விரக்தியால் தன் மகளை எப்படியாவது மருத்துவராக்கியே தீரவேண்டும் என்று முடிவெடுக்கிறார் சமுத்திரக்கனி. சிறு வயது முதலே அதற்கு மகளைத் தயார் செய்து வருகிறார். மகள் பூஜா கண்ணனும் தன் தந்தைக்குத் தானே தாயாகவும் மகளாகவும் இருந்து கவனித்துக் கொள்கிறார்.
பிளஸ் 2வில் மாவட்டத்திலேயே முதல் மார்க் எடுக்கும் தன் மகளை நீட் பயிற்சி மையத்தில் சேர்ப்பதற்காக நிலத்தில் பாதியை விற்றுப் பணம் கட்டுகிறார். நீட் பயிற்சி மையத்தில் படித்து வரும் பூஜா கண்ணன் தன் விடுதி அறையில் குளித்துக் கொண்டிருக்கும்போது அதை யாரோ சிலர் வீடியோவாக எடுத்துப் பரப்பி விடுகின்றனர். அதனைத் தொடர்ந்து பூஜா கண்ணன் காணாமல் போகிறார். மறுநாள் மகளின் வீடியோ பற்றியும் அவர் மாயமானது பற்றியும் சமுத்திரக்கனிக்குக் காவல்துறை மூலம் தெரியவருகிறது. இதன் பிறகு சமுத்திரக்கனி என்ன செய்தார்? மகள் பூஜா கண்ணனை மீண்டும் கண்டுபிடித்தாரா என்பதே ‘சித்திரைச் செவ்வானம்’ படத்தின் மீதிக் கதை.
ஸ்டண்ட் கலைஞராகத் திரைத்துறையில் முத்திரை பதித்த சில்வா முதல் முறையாக இயக்குநராகக் களம் கண்டிருக்கும் படம். முன்னும் பின்னுமாகப் பயணிக்கும் திரைக்கதையின் மூலம் தான் சொல்ல வந்த கருத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்தியதன் மூலம் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார்.
படத்தின் கதை நமக்கு முதல் காட்சியிலேயே சொல்லப்பட்டுவிடுகிறது. அதன் பின்னணியை ஆராயச் செல்லும் சமுத்திரக்கனியின் நினைவுகளில் படத்தின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளை நான் லீனியர் முறையில் சொல்லியிருப்பது சிறப்பு.
தந்தையாக சமுத்திரக்கனி. படம் முழுவதும் அவரைச் சுற்றித்தான் நகர்கிறது. தந்தையாக மகளின் மீது பாசத்தைப் பொழிவது, மகளின் வீடியோவை அழிக்கச் சொல்லி மாணவர்களிடம் கெஞ்சுவது என அனைத்துக் காட்சிகளிலும் அப்ளாஸ் அள்ளுகிறார்.
சமுத்திரக்கனிக்கு அடுத்தபடியாக குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர் பூஜா கண்ணன். இது அவருக்கு முதல் படம். ஆனால், எந்தக் காட்சியிலும் அந்தச் சாயலே தெரியாத அளவுக்கு தேர்ந்த நடிப்பை வழங்கி ஒட்டுமொத்தப் பாராட்டையும் பெறுகிறார். கோபம், அழுகை, மகிழ்ச்சி என அனைத்து உணர்வுகளையும் நடிப்பில் இயல்பாக வெளிப்படுத்துகிறார். ரீமா கல்லிங்கல் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக வந்து போகிறார். நடிப்பதற்குப் பெரிய வாய்ப்பில்லை.
படத்தில் வரும் உணர்வுபூர்வமான காட்சிகள் பார்ப்பவர்களுக்குப் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதற்கு முழுக் காரணமும் சமுத்திரக்கனி மற்றும் பூஜா கண்ணனின் நடிப்புதான். ஆங்காங்கே பல இடங்களில் வழக்கமான தமிழ் சினிமா க்ளிஷேக்கள் தென்பட்டாலும் இவர்களின் நடிப்பு அதிலிருந்து காப்பாற்றுகிறது. பள்ளி மேடையில் பூஜா கண்ணன் பேசும் காட்சி ஒரு உதாரணம்.
முதல் பாதி முழுக்க உணர்வுபூர்வமான காட்சிகளால் நகரும் படம் இரண்டாம் பாதியில் த்ரில்லர் பாணிக்கு மாறுகையில் சறுக்க ஆரம்பித்து விடுகிறது. முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பும், நேர்த்தியான கதை சொல்லல் முறையும் இரண்டாம் பாதியில் முற்றிலுமாக மிஸ்ஸிங். வீடியோ எடுத்தவர்களைத் தாக்கும் அந்த ரெயின் கோட் மர்ம மனிதன், அதற்கு ஒரு பின்னணி என ஏகத்துக்கும் சினிமாத்தனமான காட்சிகள்.
போகிற போக்கில் நீட் குறித்துப் பேசியிருப்பது பெரிதாக ஒட்டவில்லை. ஆனால், கதையில் வரும் சம்பவங்களுடன் பொள்ளாச்சி வழக்கை முடிச்சு போட்ட விதம் அருமை. சொல்ல நினைத்த விஷயம் அவசியமான ஒன்றாக இருந்தாலும் அதனைச் சொன்ன விதம் பார்ப்பவர்களுக்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாதது படத்தின் மிகப்பெரிய குறை. இரண்டாம் பாதியில் திரைக்கதை திசை மாறி எங்கெங்கோ சென்றதால் க்ளைமாக்ஸில் நமக்கு ஏற்பட்டிருக்க வேண்டிய அதிர்வு ஏற்படாமல் போகிறது.
படத்தின் தொழில்நுட்ப அம்சங்களில் குறை சொல்ல ஏதுமில்லை. ஒளிப்பதிவு, பின்னணி இசை என அனைத்தும் படத்துக்குத் தேவையானதை கொடுக்கின்றன. சாம் சி.எஸ். இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை.
படம் சொல்லும் கருத்துக்காக இயக்குநர் சில்வாவுக்கு சபாஷ் போடலாம். ஆனால், அதைச் சொன்ன விதத்தில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் தமிழ் சினிமாவின் பேசப்படக்கூடிய படமாக ‘சித்திரைச் செவ்வானம்’ இருந்திருக்கும்.