அரசியல் கட்சிகளுக்கு சுவர் விளம்பரங்கள், ஓவியங்கள் வரைபவரான பாட்ஷா (ப்ளூ சட்டை மாறன்) சில அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகிறார். இந்து தாய்க்கும், முஸ்லிம் தந்தைக்கும் பிறந்த பாட்ஷாவின் உடலைப் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்ய அவரது உறவினர்கள் எடுத்துச் செல்கின்றனர். ஆனால், பாட்ஷா உண்மையான முஸ்லிமாக வாழவில்லை என்றும், இதனால் பள்ளிவாசலில் அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்றும் அங்கிருக்கும் முஸ்லிம்களில் சிலர் உடலைத் திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
இதன் பிறகு மீண்டும் வீட்டுக்குத் திருப்பி எடுத்துச் செல்லப்படும் உடல் இந்து முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு இந்து மக்களின் உடல்களை அடக்கம் செய்யும் மயான பூமிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இறந்தவரின் பெயர் பாட்ஷா என்றிருப்பதால் அங்கும் அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனிடையே இன்னொரு புறம் இடைத்தேர்தலுக்காகத் தயாராகிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் பாட்ஷாவின் உடலை வைத்து அரசியல் செய்ய முயல்கின்றன. அனைத்தையும் தாண்டி பாட்ஷாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டதா? எப்படி அது சாத்தியமானது என்ற கேள்விக்கான விடையைச் சொல்கிறது ‘ஆன்டி இண்டியன்’.யூடியூப் தளத்தில் திரைப்படங்களை விமர்சனம் செய்து பிரபலமான ப்ளூ சட்டை மாறன் இயக்குநராகக் களமிறங்கியுள்ள முதல் படம். பிற படங்களின் நிறை குறைகளை அலசி விமர்சித்தவர், தனது சொந்தப் படத்தின் மூலம் ஒரு இயக்குநராக வெற்றி பெற்றிருக்கிறாரா என்றால் ஆம் என்று நிச்சயமாகச் சொல்லமுடியும்.
படத்தின் முதல் காட்சியே சடலமாகக் கிடக்கும் ப்ளூ சட்டை மாறனின் முகத்தில் இருந்துதான் தொடங்குகிறது. அந்த ஒரு ஷாட்டிலேயே படம் எதைச் சுற்றி நடக்கப் போகிறது என்பதை எந்தவிதப் பூசிமொழுகலும் இன்றி நேரடியாகப் பார்வையாளர்களுக்கு உணர்த்தி விடுகிறார். இறந்துபோன பாட்ஷாவின் பின்னணியும், அவர் பெற்றோரது பின்னணியும் நமக்குப் போகிற போக்கில் கதாபாத்திரங்கள் பேசிக் கொள்வதிலிருந்தே சொல்லப்பட்டு விடுகின்றன. இதற்கென்று தனி ப்ளாஷ்பேக் காட்சிகளோ, வாய்ஸ் ஓவரோ வைத்து வலிந்து திணிக்காமல் இருந்தது பெரும் ஆறுதல்.பாட்ஷாவின் மரணம், அவரது உடலை அடக்கம் செய்வதில் ஏற்படும் சிக்கல்கள், தேர்தல் நேரம் என்பதால் பிணத்தை வைத்து அரசியல் செய்ய முயலும் கட்சிகள், உடலை அடக்கம் செய்ய முன்வரும் கிறிஸ்தவ பாதிரியார், சமீபத்தில் மறைந்த ‘கில்லி’ மாறன் கருப்பு ஆங்காங்கே பேசும் நச் வசனங்கள் என முதல் பாதி போவதே தெரியவில்லை. பல காட்சிகளில் வசனங்கள் குபீர் சிரிப்பை வரவழைக்கின்றன.
படத்தின் மையக் கதாபாத்திரமான ப்ளூ சட்டை மாறன் படம் முழுக்கப் பிணமாகவே வருகிறார். முதல்வராக வரும் ராதாரவி, பாட்ஷாவின் அம்மாவாக வரும் விஜயா, உதவி கமிஷனராக வரும் ‘ஆடுகளம்’ நரேன், ‘வழக்கு எண்’ முத்துராமன், ஜெயராஜ், ‘பசி’ சத்யா, சுரேஷ் சக்ரவர்த்தி, ‘குக் வித் கோமாளி’ பாலா என படத்தில் ஏகப்பட்ட சின்ன சின்ன கதாபாத்திரங்கள் இருந்தாலும் அனைவருக்குமே சமமான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அனைவருமே இயக்குநர் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.முதல் பாதியில் இருந்த வேகமும் சுவாரஸ்யமும் இரண்டாம் பாதி தொடங்கியதுமே காணாமல் போகிறது. முதல் பாதியில் சுருக்கமான வசனங்களாலும் காட்சிகளாலுமே நகர்ந்த திரைக்கதை பிற்பாதியில் நீளமான வசனங்களாலும், வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகளாலும் தடுமாறுகிறது. துக்க வீட்டில் பாடப்படும் அந்த கானா பாடல் முதலில் வரும்போது ரசிக்கும்படி இருந்தாலும் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருப்பது படத்தின் திரைக்கதையின் ஓட்டத்தை நீர்த்துப் போகச் செய்கிறது. லொள்ளு சபா சேஷு வரும் காட்சிகள் எல்லாம் படத்துக்கு தொடர்பே இல்லாதவை. ‘ஏ1’ படத்தில் இதே போன்ற அவரது கதாபாத்திரம் வரவேற்பைப் பெற்றது என்பதற்காக இந்தப் படத்திலும் அதையே பயன்படுத்தியிருப்பது எடுபடவில்லை.
க்ளைமாக்ஸ் வரை திரைக்கதையைக் கொண்டு செல்ல இயக்குநர் தடுமாறியிருப்பது இரண்டாம் பாதியின் பல காட்சிகளில் அப்பட்டமாகத் தெரிகிறது.எனினும் அந்த அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டமும், அதைத் தொடர்ந்து நடக்கும் வன்முறையும் இதுவரை தமிழ் சினிமாவில் பேசப்படாத விஷயங்களைத் துணிவுடன் பேசியிருக்கின்றன. மத அடிப்படைவாதிகள், காவல்துறை, அரசியல் கட்சிகள், மீடியா என யாரையும் விட்டுவைக்கவில்லை இயக்குநர் மாறன். எந்தவித சமரசமோ, பாரபட்சமோ இன்றி தோலுரித்துக் காட்டியிருக்கிறார். ஓரிரு காட்சிகளே வந்தாலும் கருப்புச் சட்டைப் போட்டுக் கொண்டு கில்லி மாறன் பேசும் வசனங்கள் அப்ளாஸ் அள்ளுகின்றன. படத்தில் குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டியது வசனம்.
உதாரணமாக ‘உங்க கட்சியில் தலைவர்கள் எல்லாம் வெள்ளையா இருக்காங்க, ஆனா தொண்டர்கள் மட்டும் ஏன் கருப்பா இருக்கீங்க’, ‘உங்ககிட்ட ஒரு பிணம் கிடைச்சது, அத வச்சு 13 பேரைக் கொன்னீங்க, இப்ப உங்கக்கிட்ட 13 பிணம் கிடச்சிருக்கு, இத வச்சு என்னல்லாம் பண்ணப் போறானுங்களோ’ போன்ற வசனங்களின் மூலம் ஒரு இயக்குநராக மட்டுமின்றி வசனகர்த்தாவாகவும் முத்திரை பதித்துள்ளார் மாறன்.சையை மட்டும் தான் கவனிக்காமல் மாறன் வேறு யாரிடமாவது கொடுத்திருக்கலாம். பல இடங்களில் பின்னணி இசை 90களின் தூர்தர்ஷன் சீரியல்களை ஞாபகப்படுத்துகின்றன. ஓரிரு இடங்களைத் தவிர சொல்லிக் கொள்ளும்படி ஈர்க்கவில்லை. படம் பல இடங்களில் நாடகத்தன்மையுடன் தெரிய பின்னணி இசை ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது. இது ஒரு குறைந்த பட்ஜெட் படம் என்ற சுவடே தெரியாத அளவுக்கு நேர்த்தியான ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார் கதிரவன்.
‘ஆன்டி இண்டியன்’ எந்த மதத்தையும் தலையில் தூக்கி ஆடவுமில்லை. யாரையும் கீழே போட்டு மிதிக்கவுமில்லை. மதங்களுக்கு இடையே உண்டாகும் சிறு சிறு சலசலப்பை அப்படியே விட்டால் அதுவே சரியாகி விடும். ஆனால், அதை அதிகார வர்க்கமும், அரசியல்வாதிகளும் அப்படி விடுவதில்லை என்பதை முகத்தில் அறைந்தாற் போல், துணிவுடன் சொன்ன விதத்தில் ஜெயித்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். இரண்டாம் பாதி திரைக்கதையில் ஏற்படும் தொய்வையும், திணிக்கப்பட்ட காட்சிகளையும் சகித்துக் கொண்டால் ஒரு நல்ல படம் பார்த்த உணர்வை ‘ஆன்டி இண்டியன்’ தரும் என்பது உறுதி.