விண்ணில் இருந்து வந்த விடியல்!
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
உன்னதத்தில் இருந்து தோன்றிய அருணோதயம் நம்மை சந்திக்கிறது.
லூக்கா 1:79
கிறிஸ்துஇயேசு பிறப்பை பண்டிகையைக் கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டி ருக்கும் இவ்வேளையில் கிறிஸ்துவின் பிறப்பு நமக்கு தரும் நல்லசெய்தி என்ன வென்று சிந்திப்பது அவசியமாகும். கிறிஸ்மஸ் பண்டிகையானது புத்தாடை உடுத்து வதற்கும், பல்சுவை பண்டங்கள் உண்டு, பட்டாசுகள் கொழுத்தி, பரிசுகளை பரிமாறி கோலாகலமாக கொண்டாடுவதற்காக மாத்திரமல்ல, மாறாக பண்டிகையை சார்ந்த உண்மைகள், சம்பவங்கள் அது கற்றுத்தரும் பாடங்களை மீண்டும் மனதில் நிறுத்த ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும். எல்லா சமயத்தை சேர்ந்தவர்களாலும் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் ஏதோ ஒரு முக்கிய சம்பவத்தை எமது நினைவிற்கு கொண்டுவருகின்றன.
சந்திரனில் மனிதன் முதன் முதலாக தன்னுடைய காலடிகளை பதித்த சம்பவம் கடந்த நூற்றாண்டின் உன்னதமான விஞ்ஞான சாதனையாக கருதப்பட்டது. விண் ஓடத்திலிருந்து இறங்கி தன்காலடிகளை சந்திரனில் பதித்த நீல் ஆம்ஸ்டிராங வாயிலிருந்து வெளிவந்த நான் எடுத்து வைத்தது சிறு அடிதான், ஆனால் இது மனுக்குலத்திற்கு ஒரு பாரிய பாச்சல் என்ற அந்த வார்த்தைகள் அன்று உலகெங்கும் ஒலித்தது. ஆனால் உலக வரலாற்றில் கடவுள் தமது பாதங்களை இப்பூமியில் பதித்த சம்பவம்தான் கிறிஸ்மஸ் என்றால் அது மிகையல்ல.
கிறிஸ்மஸ் காலங்களில் வாழ்த்து மடல்களை அனுப்புவது ஒரு பாரம்பரியமாகும். இப்பொழுது பிற சமயத்தவர்களும் தமது பண்டிகை நாட்களில் வாழ்த்து மடல்கள் அனுப்பி வருகிறார்கள் என்பது நாம் அறிந்த விடையமாகும். விசேடமாக இந்நாட்களில் நாம் அவர்களை அன்போடு நினைக்கிறோம் என்ற செய்தியை தெரிவிப்பதே வாழ்த்துமடலின் மரபாகும். அதுபோல கடவுள் தன் காலடிகளை இப் பூமியில் பதித்த சம்பவமான கிறிஸ்து பிறப்பின் மூலம் மனுக்குலத்திற்கு கடவுள் அனுப்பி வைத்த வாழ்து மடலில் பொதிந்துள்ள செய்தி என்ன? என்று நாம் சற்று சிந்திப்போம்.
1. நான் உங்களை நேசிக்கிறேன்.
ஆம், இறைவன் அனுப்பிய வாழ்த்துமடலின் முக்கியசெய்தி நான் உங்களை நேசிக்கிறேன் என்ற அன்பின் செய்தியாகும். மனித குலத்தின் மீது கடவுள் வைத்த அநாதியான, அபரிமிதமான அன்பின் வெளிப்பாடுதான் கிறிஸ்மஸ். மனிதனுடைய அறிவுக்கெட்டாததும், ஆழம் காணமுடியாததும், அழியாததும், அநாதியுமான தேவ அன்பின் அடையாளமும், அளவு கோலுமே கிறிஸ்துவின் பிறப்பாகும்.
பரிசுத்த வேதாகமத்திலே கடவுளின் தன்மைகளைப்;பற்றி சொல்லப்பட்டுள்ள கூற்றுக்களில் ஒன்று தேவன் அன்பாக இருக்கிறார் என்பதாகும் (1யோவான் 4:8.) அந்த அன்பானது அவர்களின் செயல்களில் வெளிப்பட்டது. (1யோவான் 4:9-10). கடவுளின் அன்பு என்பது அபாத்திரமான எம்மீது அவர் கொண்ட தன்னலமற்ற தியாக அன்பாகும். அன்பை பெற்றுக் கொள்ளவதற்குரிய சகல தகுதிகளையும் இழந்த பாவிகளாகிய எங்களிடத்தில் கடவுள் காட்டும் அன்பானது அவரது தெய்வீக அன்புக்கு அடையாளமாகும்.
கடவுளுக்கு எதிராக கலகம்செய்த இஸ்ரவேல் ஜனங்கள் மீது அவர் காட்டிய அன்பின் மூலமும் (உபா. 7:7), துரோகம் செய்த மனைவி மீது ஒசியா காட்டிய அன்பின் மூலமும் (ஒசியா 3:1), கடவுளின் அன்பை ஓரளவு புரிந்து கொள்ளக் கூடியதாயிருக்கிறது. ஆம், கடவுளின் அன்பானது எப்பொழுதும் கிருபை சார்ந்ததாகவே இருக்கின்றது. அதாவது, மனிதன் அந்த அன்பை ஒருபோதும் சம்பாதிக்க முடியாது. கடவுளின் அன்பானது உடன்படிக்கை அன்பாகும். நாம் உண்மையற்றவர்களாக இருந்தும்கூட அவர் தொடர்ந்து எம்மீது அன்புகூருகிறார்.
2. நான் உங்களை இரட்சிக்கிறேன்.
கடவுள் அனுப்பிய வாழ்த்துமடலின் அடுத்தசெய்தி நான் உங்களை இரட்சிக்கிறேன் என்ற விடுதலையின் செய்தி. இயேசுவின் பிறப்பை மேய்ப்பர்களுக்கு அறிவித்த தேவதூதர்கள், இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்கு தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார் (லூக்கா 2:11) என்றார்கள். அதே போன்று மரியாளை இரகசியமாக தள்ளிவிட யோசனையாயிருந்த யோசேப்புக்கு, கனவில் தோன்றிய தேவதூதன் தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே…. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் (மத். 1:21) என்று கூறினார்.
ஆம், இயேசு எம் மீட்பர், இரட்சகர். எப்படியெனில் நாம் அனைவரும் பாவம் செய்தவர்களாக இருக்கிறோம். எனவே பாவம் செய்தவன் பாவத்திற்கு அடிமையாக இருக்கிறான் என்று வேதம் சொல்கிறது (யோவான் 8:34). அன்று எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் மக்களை மோசேயின் மூலமாக விடுதலை செய்த கடவுள், பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து எம்மை இயேசு கிறிஸ்து மூலம் இரட்சிக்கிறார். இயேசு எமது இரட்சிப்பின் அதிபதி. இது ஒரு செயலை ஆரம்பித்து தன்னை மற்றவர்கள் பின் தொடரும்படி முதலில் வழியை ஆயத்தப்படுத்தி அதன் வழி பயணம் செய்யும் ஒருவரை குறிக்கும். இயேசு, மனிதனின் முன்னோடியாகவும், இரட்சிப்பின் வழியை திறந்தவராகவும் இருக்கிறார். நாம் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு அறிக்கை செய்யும்போது நிகழ்காலத்தில் பாவத்தின் வல்லமையிலிருந்தும், அதன் பிடியில் இருந்தும் எம்மை இரட்சிக்கிறார். ஆகவே பாவம் எங்களை மேற்கொள்ளாது. நாம் பாவத்தின் தண்டனையைக் குறித்து பயம் கொள்ளத் தேவையில்லை.
3. நான் உங்களோடு இருக்கிறேன்.
விண்ணில் இருந்து வந்த வாழ்த்துமடலின் அடுத்தசெய்தி நான் உங்களுடன் இருக்கிறேன் என்பதாகும். இன்றைக்கு பயம் மனிதனின் மிகப்பெரிய எதிரியாகும். பல்வேறு விதமான பயங்களினால் நாம் சிலவேளை ஆட் கொள்ளப்படுகிறோம். ஏனெனில் கிறிஸ்மஸ் கடவுள் எம்முடன் இருக்கிறார் என்ற நம்பிக்கையின் செய்தியை நமக்குத் தருகிறது. நான் உன்னோடு இருக்கும்போது பயம் எதற்கு? என்று கடவுள் எம்மைப் பார்த்து கேட்கிறார். இயேசுவின் பிறப்பை முன்னறிவித்த ஏசாயா தீர்க்கதரிசி, இதோ ஒரு கன்னிகை கர்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம் (மத்.1:24)
எனவே கிறிஸ்து பிறப்பின் பண்டிகையை கொண்டாட ஆயத்தமாகும் இந்;நாட்களில், நமது தேவனாகிய கர்த்தர் எமக்கு அனுப்பிய செய்தியை எம்மனதில் அசை போடுவோம். நான் உங்களை நேசிக்கிறேன், நான் உங்களை இரட்சிக்கிறேன், நான் உங்களோடு இருக்கிறேன் என்ற இறைமகன் இயேசுவின் குரல் உங்கள் காதுகளில் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும். விண்ணில் இருந்து வந்த விடியல் உங்கள் வாழ்க்கையில் ஒரு உண்மை விடியலைக் காணச்செய்து, உங்கள் வாழ்க்கையை ஒளிமயமானதாக்கட்டும்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!
Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark.