தமிழர்களின் வாக்கும், வரியும் மட்டும் வேண்டும் ஆனால் அவர்களின் வாழ்வு மேம்பட வேண்டாமா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி தமிழக கடலோர மாவட்டங்களை சுனாமி எனும் ஆழிப்பேரலை சூறையாடியது. இதில் மொத்தம் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 16 ஆண்டுகள் கடந்த பிறகும், இன்றும் அந்த ஆழிப்பேரலையின் ஆறாத நினைவுகள், சுனாமியில் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களின் நெஞ்சில் சோகத்துடன் நிழலாடுகிறது.
அந்த வகையில் இன்று 17-வது சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து வேளாங்கண்ணியில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற சுனாமி நினைவு தின கூட்டத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 17 ஆண்டுகள் கடந்த போதும் சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோர மக்களின் வாழ்வு மேம்படவில்லை என வேதனை தெரிவித்தார். தமிழர்களின் வாக்கும், வரியும் மட்டும் வேண்டும் ஆனால் அவர்களின் வாழ்வு மேம்பட வேண்டாமா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
வாழ்க்கை முழுவதும் போராட்டமாக இருந்தால் வாழ்வது எப்போது என்று தெரிவித்த அவர், மீனவர்கள் சிறைப்படுவது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது உள்ளிட்ட தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து மத்திய அரசு கவலைப்படுவதில்லை என்று குற்றம் சாட்டினார்.