கரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேலுவின் உடல் நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வடிவேலு, கடந்த 23ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது. வேகமாக குணமடைந்து வருகிறார். சிகிச்சைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். வடிவேலு விரைவில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நடிகர் வடிவேலு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்தார். சமீபத்தில் சென்னை திரும்பிய வடிவேலுவுக்கு விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. மேலும், ‘எஸ்’ ஜீன் குறைபாடு (ஒமைக்ரான் தொற்று அறிகுறி) இருப்பது பரிசோதனையில் உறுதியானது.
இதையடுத்து அவர், சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வடிவேலுக்கு ஏற்பட்டிருப்பது ஒமைக்ரான் பாதிப்புதானா என்பதை முழுமையாகக் கண்டறிய அவரது மாதிரிகள் மத்திய அரசின் மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது