கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் பேட்டா பகுதியில் உள்ள சாயக்குடி லேனில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருபவர் லாலன். இவர் நேற்று அதிகாலை போலீஸ் நிலையத்திற்கு வந்து தனது வீட்டில் திருடன் என நினைத்து இளைஞர் ஒருவரை கத்தியால் சரமாரியாக குத்தியதாக கூறி சரண் அடைந்தார். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்குமாறும் அவர் கூறி உள்ளார்.
லாலன் கூறியதை கேட்டு அதிர்ந்த போலீசார் உடனடியாக சாயக்குடி லேனில் உள்ள லாலனின் வீட்டுக்கு விரைந்து சென்று 2வது மாடியில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த இளைஞரை மீட்டு திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து லாலனிடம் போலீசார் விசாரித்த போது, நேற்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அதிகாலை 3 மணியளவில் வீட்டின் மாடியில் இருந்து சத்தம் கேட்டு விழித்து எழுந்தேன். அங்கு திருடன் வந்துவிட்டதாக கருதி கத்தியுடன் சென்று அங்கிருந்த இளைஞரை சரமாரியாக குத்தியதாக கூறியுள்ளார்.
கொல்லப்பட்ட இளைஞரும் லாலனும் வசிக்கும் பேட்டா பகுதியைச் சேர்ந்தவர் தான். 19 வயதாகும் அவரின் பெயர் அனீஷ் ஜார்ஜ். இவர் அங்குள்ள பெத்தானி கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் லாலனின் மகளும் காதலித்து வந்ததாகவும், அவரை பார்ப்பதற்காகவே அனீஷ் அந்த நேரத்தில் வந்திருக்கக் கூடும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், லாலனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அனீஷுடன் பழக்கம் இருப்பது தெரியவந்தது. மேலும் அனீஷ் தாயார் தனது மகனை லாலன் திட்டமிட்டு கொலை செய்ததாக் கூறி உள்ளார்.