சன்னி லியோனை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றதால் அவருடைய நடன நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மாநில அரசு அனுமதி அளித்தது. இதனால் நேற்று முன்தினம் புதுவை கடற்கரை பகுதியில் புத்தாண்டு உற்சாகமாக கொண்டாட்டப்பட்டது.
குறிப்பாக புதுவை பழைய துறைமுக வளாகத்தில் நேற்று முன்தினம் 3 நாட்களுக்கு இசைநிகழ்ச்சி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் பங்கேற்பார் என தெரிவிக்கபட்டு இருந்தது. இந்த செய்தி இளைஞர்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
சன்னி லியோனை வரவேற்று புதுவையில் ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. சன்னி லியோன் பங்கேற்பார் என்றதும் ஆயிரக்கணக்கான டிக்கெட்களும் விற்று விட்டன. இதற்காக ரூ. 2500 முதல் ரூ.5000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இதற்கு பல்வேறு சமூக அமைப்புகள் சன்னி லியோன் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்திலும் ஈடுபட்டனர்.அவர்கள் பழைய துறைமுக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சன்னி லியோனின் பேனரை கிழித்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு இசை நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெற்றது.
ஆனால் இதில் சன்னி லியோன் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தெரியவில்லை. டிசம்பர் 30 ஆம் தேதி அவர் புதுவை வந்தது உறுதியான நிலையில், அவரை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றதால் அவருடைய நடன நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது.
தொடர்ந்து நடிகை சன்னி லியோன் இரவோடு, இரவாக புதுவையை விட்டு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. சன்னி லியோன் பங்கேற்பார் என்று நினைத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.