கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நடிகர் வடிவேலு மருத்துவமனையில் இருந்து நேற்று வீடு திரும்பினார்.
நகைச்சுவை நடிகர் வடிவேலு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்தபடத்தின் பணிக்காக, படக்குழுவினருடன் வடிவேலு லண்டன் சென்றிருந்தார். கடந்த மாதம் 23-ம் தேதி சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கரோனாதொற்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மாதிரியை சென்னைதேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மரபணு ஆய்வகத்தில் பரிசோதனை செய்ததில் ‘எஸ் ஜீன்’ குறைபாடு(ஒமைக்ரான் தொற்று அறிகுறி) இருப்பது உறுதியானது.
இதனால், அவரது மாதிரிகள் முழுமையான பரிசோதனைக்காக, மத்திய அரசின் மரபணு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சைக்கு பிறகு, முழுமையாக குணமடைந்த வடிவேலு நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். ஆனால், வடிவேலுவுக்கு ஏற்பட்டிருப்பது ஒமைக்ரான் தொற்று பாதிப்பா, இல்லையா என்பதை கண்டறிய அனுப்பப்பட்ட மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் மருத்துவர் சுகாஷ் பிரபாகர்நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “நடிகர் வடிவேலு பூரணகுணமடைந்துள்ளார். அவர் இன்றுடிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்” எனதெரிவித்துள்ளார்.1,489 பேருக்கு தொற்று
தமிழகத்தில் நேற்று ஆண்கள் 895, பெண்கள் 594 என மொத்தம் 1,489 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்துவந்த 19 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 682, செங்கல்பட்டில் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று 611 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகம் முழுவதும் 8,340 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் 8 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,784 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்துள்ளது. அதில், 27 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.