இந்திய பிரதமருக்கு அனுப்படவுள்ள கூட்டு ஆவணத்தில் நாம் கையொப்பமிடாவிட்டாலும், தமிழ்த் தேசியக்கட்சிகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும். அவர்களின் நடவடிக்கைக்கு எதிராக நிற்கமாட்டோம் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியாவில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு, இந்த அரசுக்குள், அரசியல் ரீதியிலும் தற்போது நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது. இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டுள்ளார். மறுபுறத்தில் மைத்திரிபால சிறிசேனவும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார். எனவே, அரசு வெகுவிரைவில் கவிழும் என்பதேயே நாட்டில் இடம்பெறும் அரசியல் சம்பவங்கள் மூலம் உணர முடிகின்றது.
எதிர்காலத்தில் புதிய கூட்டணிகள் உருவாகலாம். புதிய பயணம் பற்றி மைத்திரிபால சிறிசேனவும் கருத்து வெளியிட்டுள்ளார். அந்தவகையில் நாமும் தேர்தலுக்கு தயாராகவே இருக்கின்றோம். தேர்தலை மட்டும் எதிர்ப்பார்த்து வருபவன் தலைவர் கிடையாது, நாளை சமூகதாயம் பற்றி சிந்திப்பவனே உண்மையான தலைவர். அவ்வாறானவர்களுக்கே நாம் ஆதரவு வழங்க வேண்டும்.
தேவேளை, தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தன. அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பை பெறுவதற்கே ஆரம்பத்தில் இணக்கம் காணப்பட்டிருந்தது. அதன்பின்னர் சமஷ்டி, சுயநிர்ணயம் உள்ளிட்ட விடயங்களும் உள்வாங்கப்பட்டன. இதனால் மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகள் ஆவணத்தில் கையொப்பமிடவில்லை.
ஆனாலும் தமிழ்த் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு நாம் முழு ஆதரவை வழங்குவோம். அதற்கு தடையாகவோ – எதிராகவோ நிற்கமாட்டோம்.
அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தால் நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது. 20 மூலம் அது நீக்கப்பட்டது. அதனால் ஏற்பட்டுள்ள அவல நிலையை மக்கள் இன்று உணர ஆரம்பித்துள்ளனர். இந்த உண்மையைதான் மைத்திரி இன்று கதைக்கின்றார். ஆனால் 52 நாட்கள் அவர் அரசியல் சூழ்ச்சி செய்திருக்காவிட்டால், இன்றும் அவரே ஜனாதிபதி என்றார்.