பாடசாலை மாணவர்களின் திறமையை அடிப்படையாக கொண்டு கல்வி அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற தமிழ் மொழித் தின போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் கடந்த பல ஆண்டுகளாக மிகவும் எளிமையான முறையில் நடைபெற்று வந்தது. அதனை சிறப்பாக தேசிய மட்டத்தில் நடாத்த ஒத்துழைத்தவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் நேற்று காலை (10) தனது காரியாலயத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பொழுதே இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நான் கல்வி இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற பின்பு சிங்கள மொழித் தின விழாவும் பரிசளிப்பும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவதை பார்த்தேன். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஏன் தமிழ் மொழித் தின விழாவை மாத்திரம் மிகவும் எளிமையாக கொண்டாடுகிறீர்கள் என கேள்வி எழுப்பிய பொழுது அதற்கு அவர்கள் தந்த பதில் நிதி ஒதுக்கீடு போதாது என்பதே.
இது தொடர்பாக அன்றைய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற பொழுது அவர் உடனடியாக தமிழ் மொழித் தினத்தை நீங்கள் விரும்பியபடி நடத்துவதற்கு அனுமதி தருகின்றேன் என கூறினார்.
நான் இது தொடர்பாக அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேசிய பொழுது அதனை அவர் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார். இதன்போது நான் அவரிடம் வைத்த கோரிக்கை ஜனாதிபதியாகிய நீங்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டும். எங்களுடைய மாணவர்களுக்கு உங்களுடைய கரங்களால் பரிசில்களை வழங்கி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.
அவர் உடனடியாக அதற்கு சம்மதம் தெரிவித்ததுடன் நாங்கள் தேசிய மட்டத்தில் நடாத்திய கண்டி யாழ்ப்பாணம் ஆகிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பு செய்ததுடன் எங்களுடைய தமிழ் மொழிக்கு உரிய கௌரவத்தையும் பெற்றுக் கொடுத்தார்.
இதன் மூலம் எங்களுடைய மாணவர்களும் தங்களுடைய திறமைகளை இதுவரை காலமும் ஒரு குறிப்பிட்ட அறையில் மாத்திரமே வெளிப்படுத்தி வந்த நிலையில் அவர்களுக்கான மேடையும் அமைத்துக் கொடுக்கப்பட்டது.
இந்த தமிழ் மொழித் தின விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கு கல்வி அமைச்சின் உதவிகளை பெற்றுக் கொண்டதுடன் அதே நேரத்தில் நிதி பற்றாக்குறை காரணமாக பல வர்த்தகர்கள் மொழிப் பற்றாளர்கள் தனியார் நிறுவனங்கள் ஊடாக நிதியை பெற்று சிறப்பாக செய்து முடித்திருந்தோம். அதற்கு அன்று அனைத்து ஊடகங்களும் மிகவும் ஒத்துழைப்பு வழங்கியதையும் நினைவுபடுத்த வேண்டும்.
எனவே எதிர்வரும் காலத்திலும் கல்வி அமைச்சு தமிழ் மொழித் தின விழாவை தேசிய மட்டத்தில் தொடர்ந்தும் அதனை ஒரு தேசிய விழாவாக நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எங்களுடைய தமிழ் மொழிக்கு உரிய அங்கீகாரத்தையும் கௌரவத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளார் என்பதை யாராலும் மறக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.