நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், ‘83’ படத்தின் வசூல் குறித்து அப்படத்தின் இயக்குநர் கபீர் கான் கவலையுடன் கருத்து தெரிவித்துள்ளார்.
1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் ’83’ .கபீர் கான் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ளார். தஹீர் ராஜ் பாசின், சாகீப் சலீம், ஆமி விர்க், ஜீவா, அம்ரிதா பூரி உள்ளிட்ட பலர் இந்திய அணியின் வீரர்களாக நடித்துள்ளனர். இப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது.
வெளியான முதல் நாளில் ‘83’ படம் ரூ.13 கோடி முதல் 14 கோடி வசூலித்ததாக கூறப்பட்டது. இது, அதற்கு முன்பு வெளியான ‘புஷ்பா’,‘ஸ்பைடர்மேன்’ ஆகிய படங்களின் முதல் நாள் வசூலோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்று சினிமா ஆர்வலர்கள் கூறினர்.
மேலும், வெளியான ஐந்து நாட்களில் ‘ஸ்பைடர்மேன்’, ‘புஷ்பா’ ஆகிய படங்கள் ரூ.100 கோடியை கடந்து விட்ட நிலையில் ‘83’ படம் ரூ.60 கோடி வசூலிக்கவே தடுமாறும் நிலை ஏற்பட்டது. இதுவரை இப்படம் ரூ.97 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. மேலும், பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்துக்கு இந்த வசூல் மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘83’ படத்தின் வசூல் குறித்து அப்படத்தின் இயக்குநர் கபீர் கான் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “பெரும் அன்பை பெற்ற இப்படத்தை உருவாக்கியதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், அதேநேரம் இப்படத்தை பார்க்க விரும்பும் அனைவராலும் தற்போது பார்க்க முடியாது என்பதை எண்ணி வருத்தம் அடைகிறேன். காரணம், கரோனா பரவல் கடும் உச்சத்தில் இருக்கிறது.
இந்தப் படத்தை நாங்கள் இரண்டு ஆண்டுகளாக பார்த்துப் பார்த்து உருவாக்கி அனைவரும் பெரிய திரையில் பார்க்கக் கூடிய ஒரு சரியான நேரத்தில் வெளியிட காத்திருந்தோம். ஆனால், நாம் சிறந்த முறையில் திட்டமிட்டாலும் இந்த கரோனா காலகட்டத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. எங்கள் படத்தின் ரிலீஸ் அன்று கரோனா தொற்று எண்ணிக்கை உச்சத்துக்கு போகும் என்று எங்களுக்கு தெரியாது. படம் வெளியான டிச. 24 அன்று மட்டும் ஒரே நாளில் 6,000 பேருக்கு தொற்று ஏற்பட்டது. அடுத்த 10 நாட்களில் அது 1 லட்சமாக மாறிவிட்டது. இது மிகவும் வருத்தமான விஷயம்” என்று கபீர் கான் கூறியுள்ளார்.