இராஜகிரிய பிரதேசத்தில் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் போலி சாட்சியங்களை தயாரித்தமை மற்றும் சாட்சியங்களை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு இன்று (11) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, வழக்கின் பிரதிவாதியான பாட்டலி சம்பிக்க ரணவக நீதிமன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை.
அவர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இதன்போது அவரது சட்டத்தரணி அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவகவின் உடல்நிலையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரிக்கு (JMO) நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, குறித்த வழக்கை இன்றையதினம் (11) எடுத்துக் கொள்ள வேண்டாமென, சம்பிக்க ரணவக எம்.பி. விடுத்த வேண்டுகோளை நீதிமன்றம் நேற்றையதினம் (10) நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது