பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து ஆபாசமாக கருத்து பதிவிட்டதாக நடிகர் சித்தார்த்துக்கு கண்டனங்கள் வலுத்துள்ளது. அவரை சாய்னா நேவாலே கடுமையாக விமர்சித்து பதில் தந்துள்ள நிலையில், தேசிய மகளிர் ஆணையமும் கடுமையாக கண்டித்து நோட்டீஸும் அனுப்பியுள்ளது.
சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக இயங்கும் நடிகர்களில் முக்கியமானவர் சித்தார்த். தான் நடிக்கும் படங்களை விளம்பரப்படுத்துவது மட்டுமன்றி, அரசியல் ரீதியான கருத்துகளையும் துணிச்சலாக வெளியிட்டு வருகிறார். சிலசமயங்களில் சித்தார்த் தனது ட்வீட்களின் மூலம் சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு.
இப்போது பிரதமர் மோடியின் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்ட விவகாரத்திலும் கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்த 5-ம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ஃபெரோஸ்ர் நகருக்குச் சென்றபோது விவசாயிகளின் போராட்டத்தால் மீண்டும் டெல்லி திரும்பினார். சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.
“எந்தவொரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பும் சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னைத்தானே பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பஞ்சாப்பில் பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன்” என்று தனது ட்வீட்டில் சாய்னா தெரிவித்திருந்தார். சாய்னாவின் இந்தப் பதிவை டேக் செய்து நடிகர் சித்தார்த், “இறகுப்பந்து உலகின் சாம்பியன்… கடவுளுக்கு நன்றி. எங்களிடம் இந்தியாவின் பாதுகாவலர்கள் உள்ளனர்” என்று தெரிவித்தார்.இதில் இறகுப்பந்தின் ஆங்கில வார்த்தையான ஷட்டல் கார்க் என்பதை குறிக்க சித்தார்த் ”Subtle Cock” என்று ஆபாசமாக குறிப்பிட்டிருந்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. இது பெண்களை ஆபாசமாக சித்தரிக்கிறது என்று சர்ச்சை உருவானது. மோசமான மொழியில் சாய்னாவை சித்தார்த் அவமானப்படுத்தியுள்ளார் எனப் பலரும் அவருக்கு எதிராக கண்டனங்களை பதிவிட்டனர்.