இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனஅந்நாட்டு அமைச்சரிடம் மத்தியவெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று வலியுறுத்தினார்.
இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கடந்த மாதம் டெல்லி வந்திருந்தார். இதன் தொடர்ச்சியாக மத்திய அமைச்சர்எஸ்.ஜெய்சங்கர் ராஜபக்சவுடன் காணொலி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது இருவரும் தங்கள் சார்பிலும் நாட்டு மக்கள் சார்பிலும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் என்று அமைச்சர்ஜெய்சங்கர் உறுதி அளித்தார்.கரோனா வைரஸ் பெருந்தொற்றால் பொருளாதார ரீதியாக இலங்கை அரசு எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காண தேவையான உதவிகளை இந்தியா தொடர்ந்து செய்யும் எனவும் தெரிவித்தார்.
உணவு, அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் இறக்குமதிக்காக இந்தியா வழங்கும் ரூ.7,438 கோடி கடன் வசதி மற்றும் ரூ.3,719 கோடி மதிப்பிலான எரிபொருளை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்வது ஆகியவை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இலங்கையில் துறைமுகங்கள், உள்கட்டமைப்பு, எரிசக்தி, மின்சாரம் உள்ளிட்ட திட்டங்களில் இந்தியா முதலீடு செய்வதற்கு இலங்கை அமைச்சர் நன்றிதெரிவித்தார்” என கூறப்பட்டுள்ளது.மேலும் இந்த ஆலோசனை யின்போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப் பட்டு இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.- பிடிஐ