கண்களைத் திறக்கும் தேவன்.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
இயேசு அவனை நோக்கி, நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்றார். அதற்கு அந்த குருடன், ஆண்டவரே, நான் பார்வையடைய வேண்டும் என்றான். மாற்கு 10:51.
இன்று உலகில் இரண்டு வகையான குருடர்கள் வாழ்கிறார்கள் என்பதை உலகம் புரியும் அளவிற்கு வந்து விட்டது. முதல் வகையினர் பார்வையற்ற குருடர்கள். மற்றையோர் தேவனின் மகிமையை காணமுடியாத, காணவிரும்பாத குருடர்கள். இந்த உண்மையை விளங்கிக்கொள்ள பின்வரும் வேதப்பகுதியை கவனமாக தியானிப்போம்.
பின்பு அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீஷர்களும் திரளான ஜனங்களும் எரிகோவை விட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் மகனாகிய பர்திமேயு என்கிற ஒருகுருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சைகேட்டுக் கொண்டிருந்தான். அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு;, இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத் தொடங்கினான். அவன் பேசாதிருக்கும்படி அநேகர் அவனை அதட்டினார்கள். அவனோ, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று, முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான்.
இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார். அவர்கள் அந்தக் குருடனை அழைத்து, திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள். உடனே அவன் தன் மேல்வஸ்திரத்தை எறிந்துவிட்டு, எழுந்து, இயேசுவினிடத்தில் வந்தான். இயேசு அவனை நோக்கி, நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்றார். அதற்கு அந்த குருடன், ஆண்டவரே, நான் பார்வையடைய வேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி, நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான். மாற்கு 10:46-52.
இவன் ஒரு பிறவிக்குருடன். உலகத்தையும் காணமுடியாது, கடவுளின் கரத்தின் கிரியைகளையும், படைப்புக்களையும்; காணமுடியாது. ஆனால் அவனின் உள்ளத்தின் கண்களில் ஒரு பார்வை (தாகம்) இருந்தது. அதுதான் இயேசு பிணியாளர்களை குணமாக்குகிறார், நானும் அவர்மூலம் குணமடைய வேணடும் என்பது. அதன் நிமித்தம் அவர் அவ்வழியால் வருகிறார் என்பதை அறிந்ததும், மிகவும் பலத்த சத்தமாக இயேசுவே, தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் என்று கூப்பிடத்தொடங்கினான். இயேசு அவனை அழைத்து, அவனின் விருப்பத்தை அறிந்து, அவனைக்குணமாக்கினார்.
நாம் சற்று இந்த சம்பவத்தை சிந்தித்துப் பார்ப்போமானால், ஒரு குருடன் அல்லது அங்கவீனரான ஒருவன் தேவன் நல்லவர் என்றோ, அவர் இரக்கமுள்ளவரென்றோ ஏற்றுக்கொள்ள மாட்டான். ஆனால் இவனோ தேவனின் இரக்கத்தை வாஞ்சித்து கதறினான். அந்தக் கதறலைக் கேட்ட இயேசு அவனை அழைத்தார். இதில் நாம் கவனிக்க வேண்டியது, அவன் இயேசுவின் அழைப்பைக் கேட்டவுடன் தன்னுடைய வஸ்த்திரத்தை எறிந்துவிட்டு அவரிடம் வந்தான்.
இனி எனக்கு இந்த வஸ்த்திரம் தேவையில்லை, நான் இனி பிச்சைஎடுக்க வேண்டிய தேவையில்லை என்பதை முதலில் உணர்ந்தான். எப்படி அவன் உணர்ந்தான்? இயேசுவின் சீடர்கள் அவனிடம் திடன்கொள் இயேசு உன்னை அழைக்கிறார் என்று கூறினார்கள். திடன்கொள் என்றால் (ஆங்கிலத்தில் கொம்போட் என்பது அர்த்தம்) குறைகள் நீங்கி சுபீட்சமாக வாழு அல்லது, வாழ முற்படு என்பது அர்த்தமாகும். உடனே அவன் தனது பிச்சை எடுப்பவர்கள் போடும் அந்த கந்தை வஸ்த்திரத்தை எறிந்துவிட்டு இயேசுவிடம் போய் சுகத்தைப் பெற்றுக்கொண்டான்.
நாம் அவதானிக்க வேண்டிய இன்னுமொரு விடையம் கேள்வியினால் வரும் விசுவாசம். நல்லவேளை அவன் இயேசுகிறிஸ்த்துவைக் குறித்துக் கேள்விப் பட்டிருந்தான். அவர் அன்புள்ளவர், மனதுருக்கமுள்ளவர், மகத்துவமானவர், அநேக அற்புதங்களைச் செய்கிறவர் என்று கேள்விப்பட்டிருந்தான். வேதம் இவ்வாறு கூறுகிறது. ரோமர்10:17இல் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.
அவன் இயேசுவைக்குறித்து கேள்விப்பட்டது மட்டுமன்றி தேவனின் இந்த வார்த்தை யையும் விசுவசித்தான். அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ் செய்கிறார், பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங் கொடுக்கிறார்@ கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார். குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்@ மடங்கடிக்கப் பட்டவர்களைக் கர்த்தர் து}க்கிவிடுகிறார், நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார். பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார், அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார். சங்கீதம்146:8-9.
இந்த உண்மையை அவன் விசுவசித்தபடியால், தனக்கு அருகில் இயேசு கடந்து போகிறார் என்பதை உணர்ந்தபோது அவனுடைய வாழ்வில் நம்பிக்கை துளிர்த்தது. அதன்நிமித்தம் அவன் அவரை நோக்கி கூப்பிட்டான். ஆசீர்வாதமான ஓர் வாழ்க்கையை பெற்றுக்கொண்டான்.
தேவனுக்குப்பரியமான வாசகநேயர்களே, ஒரு சிலவேளை துன்பங்கள், துயரங்கள், வேதனைகள், நோய்கள், அமைதியற்ற சூழ்நிலைகள், பலவகையான நெருக்கங்கள் போன்ற நெருக்கடிகளில் வாழ்ந்து வருவீர்களாயின், நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே இயேசுவே, தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் என்று கூப்பிடுங்கள். அவர் உங்களின் கூப்பிடுதலுக்கு பதில்தருவார். நிறைவைக் கண்டு கொள்ளும்படியாக உங்களுக்கு இரங்குவார்.
வேதமும் இதனையே கூறுகிறது. தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். அவர் தமக்குப் பயந்தவர்களுடைய (கீழ்படிய விரும்புபவர்களுடைய) விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார். சங்கீதம் 145:18-19. தொடர்ந்து நாம் வேதத்தில் பார்ப்போமானால் லூக்கா 18:7 இல் அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? ஆகவே நாம் எமது இக்கட்டான வேளைகளில் தேவனை நோக்கி கூப்பிட்டு வாழ்க்கையில் ஆறுதலை கண்டடைவோம்.
பர்திமேயு பிறவிக்குருடன்;. அவன் கண்கள் திறந்தவுடன் அவன் கண்டது இயேசுவைத்தான். அவன் ஏழை, படிப்பறிவற்றவன், பிச்சைக்காரன். ஆனால் அவனுக்கு நன்றியுள்ள இருதயம் இருந்தது. அதனால் தேவனை துதிக்க வேண்டுமென்ற ஆவல், ஆசை, விருப்பம் இருந்தது. அவன் இயேசுவின் பின் செல்லுவதையே தன்னுடைய வாழ்க்கையின் குறிக்கோளாக, நோக்கமாக தீர்மானித்துவிட்டான். அதனால் இயேசுவின் பின்சென்றான். (வசனம் 52). எமக்கும் தேவன் எவ்வளவோ நன்மைகளை செய்துள்ளார். நாமும் அவரை ஆராதிக்க அவர் பின்செல்வோமா?
அன்பின் ஆண்டவரே, இன்று, உம்மைநோக்கி உண்மையாக கூப்பிடுவோரின் குரலைக் கேட்டு அவர்களுக்கு இரங்கும் தேவன் என்பதை உணர உதவியதற்காக உமக்கு நன்றி அப்பா. நானும் உம்மை நோக்கி கூப்பிட்டு ஆறுதலைக் கண்டடையவும், நன்றியுள்ள இருதயத்துடன் உம்மைப் பி;ன்பற்றி வாழ உதவி செய்து காத்துக் கொள்ளும் நல்லபிதாவே, ஆமென்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Pray for Denmark.