மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயில் இருந்து குருணாகல் வரையான பகுதி மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது.
இது தொடர்பான நிகழ்வு நேற்று (15) ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரின் தலைமையில் குருணாகல் – யக்கபிட்டியவில் நடைபெற்றது.
சமய அனுஷ்டானங்களுடன் நிகழ்வு ஆரம்பமானது. மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயில் இருந்து குருணாகல் வரையான பகுதி 41 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். இது ஐந்து இடைமாறல் பகுதிகளைக் கொண்டது. மீரிகம, நாக்கலாகமுவ. தம்பொக்க, குருணாகல், யக்கபிட்டிய ஆகிய இடங்களில் இடைமாறல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நான்கு ஒழுங்கைகளைக் கொண்டதாக இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வந்து 5 வருட காலப்பகுதிக்குள் நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்த சகல விடயங்களையும் எதிர்வரும் 3 வருட காலப்பகுதிக்குள் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ இந்நிகழ்வின் போது உறுதியளித்தார்.
இதற்கு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பும் தேவை. மக்களுக்காக சேவையாற்றுவதற்கே தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்ததாகவும் ஜனாதிபதி கூறினார்.
நாட்டின் அபிவிருத்திக்கு முறையான போக்குவரத்துக் கட்டமைப்பு அவசியமாகும். இதன்படி அதிவேக நெடுஞ்சாலைகளையும் கிராமிய வீதிகளையும் தற்போதைய அரசாங்கம் அபிவிருத்தி செய்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இந்த நிகழ்வின் போது கூறினார்.
அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிக்கும் போது விமர்சனங்களை எதிர்கொண்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தடைப்பட்டன. எனினும்இ தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் அதிவேக நெடுஞ்சாலைகளின் அபிவிருத்திப் பணிகளை மீண்டும் ஆரம்பித்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தார்.
மக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கு உரிய தீர்வு வழங்குவதற்கு ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் பொறுப்புடன் பணியாற்றுவதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.