இன்றும் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர்களை பிடிக்க அரசால் முடியவில்லை என்பது போல இது தொடர்பான விசாரணைகள் எதுவும் நம்பகத்தன்மையுடன் நடைபெறாதது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.
அண்மையில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் தன்மையினால் சந்தேகம் மேலும் வலுவடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மஸ்கெலியா தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் கபில நாகந்தலவின் ஏற்பாட்டில் ஹட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் மக்கள் சந்திப்பு ஒன்று இன்று (17) மாலை இடம்பெற்றது.
இங்கு இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
மரியாதைக்குரிய காதினல் அவர்களின் கோரிக்கைகளைக்கூட கருத்திற்கொள்ளாத அரசாங்கம், இதெல்லாம் நகைச்சுவையாகவே எடுத்துள்ளதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஈஸ்டர் தாக்குதல் என்ற போர்வையில் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்று அனைத்தையும் மறந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் இன்று முழு சமூகத்திலும் எழுந்துள்ளதாகவும், அரசாங்கத்தின் சந்தேகத்திற்கிடமான நடத்தை மற்றும் விசாரணைகளின் மந்தப் போக்கு என்பன அதனை அப்பட்டமாக நிரூபித்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர்கள் உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் நாட்டின் நியாயமானதும் சுதந்திரமானதுமான விசாரணையின் மூலம் கிடைக்க வேண்டிய அதிகபட்ச தண்டனையை வழங்க தயங்கமாட்டேன். இந்த அரசாங்கத்தின் கீழ் இவ்வாறானதொரு விடயத்தை எதிர்பார்ப்பது கேலிக்கூத்தானது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.