அனைத்து விமர்சனங்களையும் நாம் சரியான முறையில் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மாநாடு’. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இப்படம் கடந்த நவ.25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பலரும் படக்குழுவை பாராட்டி வந்தனர்.
இது ‘டைம்-லூப்’ வகையைச் சேர்ந்த படம் என்பதால் காட்சிகள் மீண்டும் மீண்டும் ரிப்பீட் ஆகிக் கொண்டிருக்கும். ஆனால் அதனை பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாத வகையில் திரைக்கதையை அமைத்திருப்பார் வெங்கட் பிரபு.
இந்நிலையில் ‘மாநாடு’ படத்தை திரையரங்கில் பார்த்த ரசிகர் ஒருவர் வெளியே வந்து ஊடகங்களிடம் ‘படம் புரியவில்லை, காட்சிகள் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருப்பதால் தலை வலி வந்துவிட்டது’ என்று பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த பிரேம்ஜி அமரன் தனது அண்ணன் வெங்கட் பிரபுவையும் அப்பதிவில் டேக் செய்திருந்தார்.
பிரேம்ஜியின் அந்த பதிவுக்கு பதிலளித்துள்ள வெங்கட் பிரபு, “அனைத்து விமர்சனங்களையும் நாம் சரியான முறையில் ஏற்றுக் கொள்ள வேண்டும் பிரேம். நல்லதோ கெட்டதோ. நாம பார்க்காத விமர்சனமா? அடுத்த படம் இவருக்கும் புடிக்கிற மாதிரி புரியுற மாதிரி முயற்சி செய்வோம்” என்று கூறியுள்ளார்.தற்போது அசோக் செல்வன் நடிப்பில் ‘மன்மதலீலை’ என்ற படத்தை வெங்கட்பிரபு இயக்கவுள்ளார். இதில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். பிரேம்ஜி இசையமைக்கும் இப்படத்துக்கு தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்கிறார்.