தனது திரை வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் நடிகர் விஜய் மிகவும் முக்கியமானவர் என்று பிரியங்கா சோப்ரா நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.
2000-ம் ஆண்டு உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரியங்கா சோப்ரா. அதன் பிறகு 2002-ம் ஆண்டு மஜீத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்பு பாலிவுட்டில் அறிமுகமாகி, ஹாலிவுட் படங்கள், வெப் தொடர்கள் என நடித்து தற்போது உலகளவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் பிரியங்கா சோப்ரா.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தன் வாழ்க்கை குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். மேலும், அப்பேட்டியில் நடிகர் விஜய் குறித்து பிரியங்கா சோப்ரா பேசியுள்ளார். அதில் அவர், ”முதன்முதலில் நான் நடித்த சில படங்களில் தமிழ்ப் படமான ‘தமிழன்’ மற்றும் ‘அண்டாஸ்’, ‘தி ஹீரோ’ ஆகிய இரு இந்திப் படங்களும் அடங்கும். அன்றைய காலகட்டத்தில் அவை பெரிய படங்கள். நடிப்பு என்பது நாம் அணியும் ஆடைகளும் மேக்கப்பும் மட்டுமே என்ற எண்ணத்தோடு படப்பிடிப்புத் தளத்துக்குள் நடந்து சென்றது எனக்கு நினைவிருக்கிறது.
எனக்கு தமிழ் மொழி தெரியாததால் ‘தமிழன்’ திரைப்படத்தில் நடித்தது எனக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. நான் வசனங்களைக் கேட்டு, அவற்றை மனப்பாடம் செய்து, அதன் அர்த்தத்தை புரிந்துகொண்டு அதன் பிறகுதான் என்னுடைய வரிகளை பேசுவேன். ஆனால், என்னுடைய சக நடிகர் விஜய் நடிப்பதை பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு பிடிக்கும். என்னுடைய திரை வாழ்க்கையின் ஆரம்பத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய சிலரில் அவரும் ஒருவர்.விஜய் படப்பிடிப்புத் தளத்தில் மிகவும் பணிவுடன் இருப்பார். ஒருமுறை படப்பிடிப்புத் தளத்துக்குள் வந்துவிட்டால் அதன் பிறகு வெளியே செல்லவே மாட்டார். அதை இப்போதும் நான் கடைபிடித்து வருகிறேன். நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் என்றால் மட்டுமே தவிர மிகவும் அரிதாகத்தான் என்னுடைய கேரவனுக்குத் திரும்பிச் செல்வேன்” என்று பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.