இனங்களுக்கிடையில் நட்புறவை ஏற்படுத்தும் வகையில் வடக்கு மாகாணத்தில் பணிபுரிகின்ற சிங்கள மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பொலிஸாருக்கு தமிழ் மொழியை கற்பிப்பதற்கு இந்து பௌத்த பேரவை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இந்து பௌத்த பேரவையின் பொதுச் செயலாளர் தேசமானிய எம்.டி.எஸ் இராமச்சந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வடக்கிலுள்ள சிங்கள மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பொலிஸாருக்கு தமிழ் மொழியை கற்பிப்பதற்கு இந்து பௌத்த பேரவையை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரியதன் அடிப்படையில் குறித்த விடயம் இடம்பெறவுள்ளது.
வடமாகாணத்தில் பௌத்த இந்து பேரவை ஆரம்பிக்கப்பட்டு பத்து வருடங்கள் கடந்த நிலையில் சுமார் 24,000இற்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள் இரண்டாம் மொழியான சிங்கள அறிவைப் பெற்று சான்றிதழ்களுடன் வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் கடமையாற்றுகின்ற சிங்கள மொழியை தாய்மொழியாகக் கொண்ட பொலிஸாருக்கு தமிழ் மொழி மூலமான அறிவை பெறுவதற்கு இந்து பௌத்த பேரவையினூடாக மேற்கொள்ளப்படும் இச் செயற்பாடு உதவியாக இருக்கும்.
குறித்த பயிற்சியின் மூலம் இனங்களுக்கிடையில் நல்லுறவை வளர்த்துக் கொள்வதற்கும் வடக்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் நிலவுகின்ற தமிழ் மொழிப் பிரச்சினைக்கு படிப்படியாகத் தீர்வு காணமுடியும்.
வடக்கில் பணிபுரியும் சிங்கள மொழியை தாய்மொழியாக கொண்ட பொலிசாருக்கு குறித்த பயிற்சியை வழங்குவதற்கு இலங்கை பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய குறித்த சிபாரிசினை இலங்கை பொலிஸ் திணைக்களம் எமக்கு அனுப்பி வைத்துள்ளது.
எனவே சிங்கள மொழியை தாய்மொழியாக கொண்ட பொலிஸாரின் பெயர் விபரங்கள் கிடைத்தவுடன் ஐந்து மாவட்டங்களிலும் பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட இடங்களில் அவர்களுக்கு தமிழ்மொழி பயிற்சியை வழங்குவோம் என தெரிவித்தார்.