அ.தி.மு.க ஊராட்சி ஒன்றிய பெண் உறுப்பினர்கள் காரில் கடத்தப்பட்டனர்.
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தற்பொழுது ஊராட்சி ஒன்றிய தலைவராக இருப்பவர் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஜெகநாதன். ஊராட்சி மன்றத்தில் 6 அ.தி.மு.க. உறுப்பினர்களும். தி.மு.க. உறுப்பினர்கள் 5 பேர் மற்றும் பாமக- கம்யூனிஸ்ட் தலா 1 உறுப்பினர் என மொத்தம் 13 உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று பனமரத்துபட்டி ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் ஜெகநாதன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. இதன் காரணமாக ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன் தனது ஆதரவாளர் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களுடன் ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள கூடுதுறையில் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்ய காரில் வந்தார்.
அப்பொழுது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள கத்தேரி பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் போலீசாரின் தடுப்பு வேலிகளை சாலையின் குறுக்கே வைத்து பயங்கர ஆயுதங்களுடன் வழி மறித்த 20 பேர் கொண்ட கும்பல் காரில் இருந்த 5 வது வார்டு உறுப்பினர் சங்கீதா, 8 வது வார்டு உறுப்பினர் பூங்கொடி ஆகியோரை குண்டு கட்டாக தூக்கி தங்கள் காரில் ஏற்றிகொண்டு மின்னல் வேகத்தில் சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகநாதன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குமாரபாளையம் போலீஸ்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர் புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.