குண்டு வைத்து ஜெயில் தகர்க்கப்பட்டு பயங்கரவாதிகள் தப்பியோடியுள்ளனர்.
2011 முதல் சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பை ஒழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகள் ஈடுபட்டன.
இதனையடுத்து, 2019 ஆம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை ஒழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்காவிற்கு சிரியாவின் வடக்கு பகுதியில் இருந்த குர்திஷ் கிளர்ச்சியாளர்களின் படைகள் பெரும் உதவி செய்தது. மேலும், பிடிபட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளை கைதிகளாக சிறைகளில் அடைத்து அவர்களை கண்காணித்தும் வருகின்றனர்.
இதற்கிடையில், குர்திஷ் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் வடகிழக்கு பகுதியில் ஹவெரன் என்ற ஜெயில் உள்ளது. இந்த ஜெயிலில் நூற்றுக்கணக்கான ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஹவெரன் ஜெயிலில் இன்று கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. ஜெயில் கேட் மீது இன்று காலை வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் வேகமாக வந்து மோதியது.
இதில், கார் வெடித்து சிதறி ஜெயில் கேட் சேதமடைந்தது. அதன்பின்னர், அங்கு பதுங்கி இருந்து ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஜெயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த குர்திஷ் கிளர்ச்சியாளர் மீது தாக்குதல் நடத்தினர்.
மேலும், ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த சக பயங்கரவாதிகளையும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் விடுதலை செய்தனர். இந்த சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ்.பயங்கரவாதிகள் சிறையில் இருந்து தப்பிச்சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.