கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படம் ஏப்ரலில் திரைக்கும் வரவுள்ளது.
கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’. இந்தப் படத்தின் கதையினை ஜெயமோகன் எழுதியுள்ளார். இதில் ராதிகா சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சிலம்பரசனுக்கு நாயகியாக கயடு லோஹர் நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியராக தாமரை ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 5’, ‘தி ஸ்பை நெக்ஸ்ட் டோர்’ உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் படங்களின் சண்டைக் காட்சிகளில் பணிபுரிந்த லீ விட்டேகர் இப்படத்திலும் பணிபுரிகிறார்.
வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னையில் அரங்குகள் அமைத்து சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கினார்கள். இரண்டு கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இம்மாத இறுதிக்குள் ‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. இத்தகவலை இப்படத்தின் தயாரிப்பாளர் ‘வேல்ஸ்’ ஐசரி கணேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார்.
ஏற்கெனவே ‘கேஜிஎஃப் 2’, ‘பீஸ்ட்’ ஆகிய படங்கள் ஏப்ரலில் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த போட்டியில் ‘வெந்து தணிந்தது காடு’ படமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.