பொது இடத்தில் முத்தம் கொடுத்த வழக்கில் இருந்து நடிகை ஷில்பா ஷெட்டியை மும்பை கோர்ட்டு விடுவித்து உள்ளது.
ராஜஸ்தானில் கடந்த 2007-ம் ஆண்டு நடந்த ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கேர், பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
விழா மேடையில் நின்று கொண்டிருந்த ரிச்சர்ட் கேர், யாருமே எதிர்பார்க்காத வகையில் ஷில்பா ஷெட்டியை அணைத்து முத்தம் கொடுத்தார். இதனால் ஷில்பா ஷெட்டி அதிர்ச்சி அடைந்தாலும், பின்னர் அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்தபடி நின்றார். இந்த சம்பவத்திற்கு பல்வேறு சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக ஷில்பா ஷெட்டிக்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. வழக்குகளும் தொடரப்பட்டன. இதுதொடர்பாக ராஜஸ்தானில் பதிவான வழக்கு மும்பை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இந்தநிலையில் விசாரணை நிறைவில், வழக்கில் இருந்து ஷில்பா ஷெட்டியை மாஜிஸ்திரேட்டு கேட்வி சவான் விடுவித்து உள்ளார். இது தொடர்பான கோர்ட்டு தீர்ப்பில், ‘இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரிச்சர்ட் கேரின் செயலால் ஷில்பா ஷெட்டி பாதிக்கப்பட்டதாக தான் தெரிகிறது. ஆனால் போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் பார்த்தால் ஷில்பா ஷெட்டிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றே தெரிகிறது. எனவே, அவர் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்படுகிறார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.