இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை விரைவில் நடத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டு இருப்பதாகவும் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.
மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது லடாக் எல்லை மோதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், ‘இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான 14-வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த 14-ந் தேதி நடந்தது உங்களுக்கு தெரியும். அங்கு நிலுவையில் இருக்கும் மீதமுள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பது, எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், இருதரப்பு உறவுகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கும் உதவும் என்று இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்’ என தெரிவித்தார்.
எல்லை விவகாரம் தொடர்பாக இரு தரப்பும் நெருங்கிய தொடர்பில் இருப்பதற்கும், இராணுவ மற்றும் தூதரக வழிகள் மூலம் பேச்சுவார்த்தையை தொடர்வதற்கும், மீதமுள்ள பிரச்சினைகளுக்கு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை விரைவில் எட்டுவதற்கும் ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை விரைவில் நடத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டு இருப்பதாகவும் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.