பெகாசஸ் உளவு மென்பொருளை இந்தியா வாங்கியது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புத் துறையின் ஒரு பிரிவான என்எஸ்ஓ (NSO) நிறுவனத்தின் தயாரிப்புதான் பெகாசஸ் உளவு மென்பொருள். இந்நிறுவனம் இந்த மென்பொருளை பல்வேறு நாடுகளின் அரசு அமைப்புகளுக்கு (உளவு, ராணுவம்) விற்பனை செய்து வருகிறது. நாட்டுக்கு எதிராக சதி திட்டங்கள் தீட்டுபவர்களை கண்டறிய இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த பெகாசஸ் மென்பொருள் மூலம் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் செல்போன் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம்சாட்டின.
இந்தியாவிலும் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், அரசியலமைப்புப் பதவியில் இருப்போர், தொழிலதிபர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் செல்போன்கள் இந்த மென்பொருள் மூலம் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் செய்த அமளியில் கடந்த ஆண்டு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் முடங்க, உச்ச நீதிமன்றத்தால் 3 பேர் கொண்ட தனி விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
இந்த விவகாரம் இப்போது மீண்டும் இந்தியாவில் பூதாகரமாகியுள்ளது. அதற்கு காரணம், அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள புதிய செய்திக் கட்டுரை. ‘உலகின் அதி சக்திவாய்ந்த சைபர் ஆயுதத்துக்கான போர்’ (The Battle for the World’s Most Powerful Cyberweapon) என்ற பெயரில் வெளியிட்டுள்ள அந்த கட்டுரையில், “இஸ்ரேல் உடனான இரண்டு பில்லியன் பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு கடந்த 2017-ல் பெகாசஸ் மென்பொருளை வாங்கியது” என்று குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் பெகாசஸ் உளவு மென்பொருள் வாங்கியது குறித்து விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “இந்தியா-இஸ்ரேல் ஒப்பந்தம் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படவில்லை, எனவே ரத்து செய்து பணத்தை மீட்டெடுக்க வேண்டும். கிரிமினல் வழக்கைப் பதிவு செய்வதற்கும், பெகாசஸ் மென்பொருள் கொள்முதல் ஒப்பந்தம் மற்றும் பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஒப்பந்தத்தை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்” என்று அதில் அவர் வலியுறுத்தி உள்ளார்.