தம்மை நம்புகிறவர்களை களிகூரவைக்கும் தேவன்.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக. நீர் அவர்களைக் காப்பாற்றுவீர். உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள்
உம்மில் களிகூருவார்களாக. சங்கீதம் 5:11.
இன்றுவரை ஜீவன்தந்து, எல்லாவித சூழ்நிலைகளிலும் காத்து, வழிநடத்தி வந்த தேவாதி தேவனுக்கு நன்றி செலுத்துவோமாக. எத்தனை துன்பங்கள் இழப்புக்கள் வந்தாலும், தேவ சந்நிதிக்கு வரும்போது அல்லது, தேவனே நீரே எல்லாம் என்று உள்ளத்தின் ஆழத்தில் இருந்து அறிக்கை செய்யும்போது, மேலே நாம் வாசித்த வசனத்தில் கூறப்பட்டுள்ளதை எமது அன்றாட வாழ்வில் அனுபவிக்க முடியும். காரணம் தேவனே நம்மை உண்டாக்கியவர். இந்த உண்மையை யார் யார் நிச்சயத்தோடு ஏற்றுக் கொள்கிறார்களோ அத்தனை பேரையும் அவர் காப்பாற்றி தம்மில் களிகூரவைப்பார்.
தேவனை நம்பி தேவபயத்தோடு தேவனை நேசிக்கிறவர்கள் தமக்கு நியமிக்கப் பட்டிருக்கும் ஜீவிய நாட்களை சந்தோசமாக கழிப்பது தேவன் அருளிய ஈவு என்பதை நாம் ஒருவரும் மறக்கக்கூடாது. அதே நேரம் கீழ்ப்படியவும், அன்பும் அற்றவனுக்கோ வாழ்நாட்கள் பிரயேசனமற்ற வெறுமையானதாக இருக்கும். ஆனால் கர்த்தரை நம்புகிறவர்களுக்கோ, சிலசமயம் காரணங்கள் விளங்காவிட்டாலும்கூட சகலதும் நன்மைக்கு ஏற்றதாக அல்லது, ஏதுவானதாக இருக்கும் என்ற நம்பிக்கையால் என்ன நேர்ந்தாலும் தேவனுக்குள் நிச்சயமாகவே அவர்கள் தமது வாழ்க்கையை சந்தோசமாக அனுபவிக்கலாம்.
நமது வாழ்நாட்கள் தொல்லைகள் நிறைந்ததாக இருந்தாலும் தேவன் நம்மைத் தட்டிக்கொடுத்து தமது அன்பையும், மக்கள்மீது வைத்திருக்கும் கரிசனையையும் வெளிப்படுத்தி உற்சாகப்படுத்துகிறார். காரணம் இந்த பூவுலக வாழ்வு நிலையற்றது. அந்த நிலையற்ற வாழ்வை மக்கள் வீண்துன்பங்களுடன் கழிப்பதை தேவன் விரும்பவில்லை. அதனால் இவ்வாறு வாழும்படியாக வேதம் நமக்கு அறிவுறுத் துகிறது.
பிரசங்கி 9:7-10. நீ போய், உன் ஆகாரத்தைச் சந்தோஷத்துடன் புசித்து, உன் திராட்சரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி. தேவன் உன்கிரியைகளை அங்கீகாரம் பண்ணியிருக்கிறார். உன்வஸ்திரங்கள் எப்பொழுதும் வெள்ளையாயும், உன்தலைக்கு எண்ணெய் குறையாததாயும் இருப்பதாக. சூரியனுக்குக்கீழே தேவன் உனக்கு நியமித்திருக்கிற மாயையான நாட்களிலெல்லாம் நீ நேசிக்கிற மனைவியோடே நிலையில்லாத இந்த ஜீவவாழ்வை அநுபவி. இந்த ஜீவனுக்குரிய வாழ்விலும், நீ சூரியனுக்குக்கீழே படுகிறபிரயாசத்திலும் பங்கு இதுவே. செய்யும்படி உன்கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன்பெலத்தோடே செய். (ஆனால் தேவன் பேரில் நம்பிக்கை வைக்காமல் எமது பிரயாசம் இருக்குமானால் அது நம்மை பாதளத்திற்கு அழைத்துச் செல்கிறது என்பதை மறவாதே. அதைத்தான் தேவன் இங்கு உணர்த்த விரும்புகிறார்). நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.
இதை இன்னும் விளங்கிக்கொள்ள கீழ்வரும் வேதப்பகுதியையும் கவனிப்போம். பாதாளம் உம்மைத் துதியாது, மரணம் உம்மைப் போற்றாது. குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தைத் தியானிப்பதில்லை. ஏசாயா 38:19.
கர்த்தரின் வழியை முதலில் நாம் அறியவேண்டும். அப்போதுதான் நாம் அவரில் நம்பிக்கை வைக்க முடியும். அதன்போது அவருக்குப் பயப்படும்படியாக நமது இருதயம் ஒரு முகப்படும். இதனை சங்கீதம் 86:11 மிகத்தெளிவாக இவ்வாறு வெளிப்படுத்துகிறது. கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன். நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒரு முகப்படுத்தும்.
அண்டசராசரங்களையும் படைத்த நம் ஆண்டவரின் வல்லமை, மகிமை, மாட்சிமை போன்ற குணாதிசயங்களை நாம் தியானிக்கும்போது, பொதுவாக நமக்குள் எழும் ஒரு பிரமிப்பு அல்லது மரியாதையுடன்கூடிய பக்தியே தேவனுக்கு பயப்படும் பயமாகும். அந்த விதமான ஒரு உணர்வு நமக்குள் வரும்போது, அவரே எல்லாம் நான் ஒன்றும் இல்லை என்ற எண்ணம் அல்லது உணர்வு எமக்குள் எழும். அந்த எண்ணம் அல்லது உணர்வுதான் தேவனிற்கு பயப்படும் பயமாகும்.
அந்தப்பயம் கர்த்தர் என்னுடன் இருக்கிறார் என்ற உணர்வைத்தரும். அதன் மூலம் தீமை செய்யாதபடி தடுக்கப்பட்டு, நன்மை செய்கிறவர்களாக எம்மை மாற்றும். கர்த்தருக்குக் கீழ்ப்படியவும், அவரைப் பிரியப்படத்தவும் நம்மை தைரியப்படுத்தும்.
வருட ஆரம்பத்தில் அநேக எதிர்பார்ப்புக்களுடன் காத்திருக்கும் பிரியமான பிள்ளைகளே, கர்த்தருக்கு மாத்திரம் பயந்து, அவரை மாத்திரம் பிரியப்படுத்த உங்களை அவருக்கு அர்ப்பணித்துப் பாருங்கள். உங்கள் வாழ்வில் ஒரு பெரிதான விடுதலையையும், ஆறுதலையும், சந்தோசத்தையும், தேவபிரசன்னத்தையும் உணருவீர்கள். அந்த உணர்வு உங்களை கர்த்தருக்குள் கெம்பீரிக்கச்செய்யும். அந்த உணர்வை அடைந்து தேவனுக்குள் கெம்பீரித்து வாழ கீழ்வரும் ஜெபத்தை என்னுடன் சேர்ந்து தேவனிடம் ஒப்புக்கொடு.
அன்பின் பரலோக பிதாவே, உம்மில் நம்பிக்கை வைத்து சேவிப்பதனால் வரும் நன்மைகளையும், ஆறுதலையும் குறித்து தெரிந்துகொள்ள இன்று உதவிநீரே நன்றி அப்பா. நான் உம்மிலே நம்பிக்கை வைத்து, உமக்குள் நிலைத்திருக்க எனக்கு உதவி செய்யும். உலகமும் அதன் இச்சைகளும் உம்மை விட்டு என்னைப் பரிக்காமல், நான் உம்முடன் நிலைத்திருந்து வாழ உதவி செய்யும் பிதாவே, ஆமென்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Bro. Francis T. Anthonypillail. Rehoboth Ministries – Praying for Denmark.