ஜனாதிபதி உரையுடன் நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) கூடுகிறது. இதனை தொடர்ந்து மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அது பற்றிய வரலாற்று தகவல்கள் வருமாறு:-
* இந்தியாவில் 1860-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதிதான் முதல்முறையாக பட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதைய கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த ஸ்காட்லாந்து பொருளாதார நிபுணரும், அரசியல்வாதியுமான ஜேம்ஸ் வில்சன் அதை இங்கிலாந்து அரச குடும்பத்திடம் சமர்ப்பித்தார்.
* சுதந்திர இந்தியாவின் முதலாவது பட்ஜெட்டை 26-11-1947 அன்று அப்போதைய நிதி மந்திரி ஆர்.கே.சண்முகம் செட்டியார் தாக்கல் செய்தார். நீண்ட பட்ஜெட் உரையை ஆற்றியவர், நிர்மலா சீதாராமன் ஆவார். 1-2-2020 அன்று பட்ஜெட் தாக்கல் செய்தபோது 2 மணி 42 நிமிடம் உரையாற்றினார்.
இன்னும் 2 பக்கங்கள் மீதம் இருந்தபோது அவர் சோர்வடைந்ததால், அந்த பக்கங்களை படித்ததாக கருதுமாறு சபாநாயகரை கேட்டுக்கொண்டார். முந்தைய ஆண்டில் 2 மணி 17 நிமிடம் பேசி படைத்த சாதனையை அவரே முறியடித்தார்.
* வார்த்தைகள் அடிப்படையில் பார்த்தால், 1991-ம் ஆண்டு மன்மோகன்சிங் ஆற்றிய உரை 18 ஆயிரத்து 650 வார்த்தைகளுடன் நீண்ட உரையாக இருந்தது. 2018-ம் ஆண்டு, அருண் ஜெட்லி ஆற்றியது 18 ஆயிரத்து 604 வார்த்தைகளுடன் 2-வது நீண்ட உரை ஆகும். 1977-ம் ஆண்டு, ஹிருபாய் முல்ஜிபாய் ஆற்றிய பட்ஜெட் உரை, வெறும் 800 வார்த்தைகளுடன் மிகக்குறுகிய உரை ஆகும்.
* அதிக பட்ஜெட் தாக்கல் செய்த பெருமைக்கு உரியவர் மொரார்ஜி தேசாய். 1962 முதல் 1969-ம் ஆண்டுவரை அவர் 10 பட்ஜெட்கள் தாக்கல் செய்துள்ளார். ப.சிதம்பரம் (9 பட்ஜெட்), பிரணாப் முகர்ஜி (8), யஷ்வந்த் சின்கா (8), மன்மோகன்சிங் (6) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
* 1999-ம் ஆண்டுவரை, இங்கிலாந்து வழக்கப்படி, பிப்ரவரி மாத கடைசி வேலை நாளில் மாலை 5 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அந்த ஆண்டுதான் காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யும் முறையை யஷ்வந்த் சின்கா கொண்டு வந்தார். பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்யும் முறை, 2017-ம் ஆண்டு அறிமுகம் ஆனது.
* 1955-ம் ஆண்டு வரை ஆங்கிலத்தில் மட்டுமே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ் அரசு, இந்தியிலும் பட்ஜெட்டை அச்சடிக்க தொடங்கியது. கொரோனா காரணமாக, கடந்த ஆண்டு காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
* இந்திரா காந்திக்கு பிறகு பட்ஜெட் தாக்கல் செய்த 2-வது பெண் நிர்மலா சீதாராமன் ஆவார்.
* 92 ஆண்டுகளாக தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்த ரெயில்வே பட்ஜெட், 2017-ம் ஆண்டில் இருந்து மத்திய பட்ஜெட்டுடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
* 1950-ம் ஆண்டுவரை, ஜனாதிபதி மாளிகையில் பட்ஜெட் அச்சடிக்கப்பட்டு வந்தது. அப்போது பட்ஜெட் கசிந்ததால், டெல்லி மின்டோ சாலையில் உள்ள அச்சகத்துக்கு இப்பணி மாற்றப்பட்டது. 1980-ம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சகம் அமைந்துள்ள வடக்கு பிளாக் கட்டிடத்தில் அரசு அச்சகம் அமைக்கப்பட்டது.
* இந்திரா காந்தி அரசில் தாக்கல் செய்யப்பட்ட 1973-1974 பட்ஜெட்டில், நிதி பற்றாக்குறை ரூ.550 கோடியாக இருந்ததால், அது கருப்பு பட்ஜெட் என அழைக்கப்பட்டது. 1991-ம் ஆண்டு மன்மோகன்சிங் தாக்கல் செய்தது, ‘சகாப்தம் பட்ஜெட்’ என அழைக்கப்பட்டது.
* ப.சிதம்பரம் தாக்கல் செய்த 1997-1998 பட்ஜெட்டில் வசூலை அதிகரிக்க வரி குறைப்பு செய்யப்பட்டதால், அது ‘கனவு பட்ஜெட்’ என அழைக்கப்பட்டது. புத்தாயிரம் பிறந்த 2000-ம் ஆண்டில் யஷ்வந்த் சின்கா தாக்கல் செய்த பட்ஜெட், ‘மில்லினியம் பட்ஜெட்’ என அழைக்கப்பட்டது.
* யஷ்வந்த் சின்கா தாக்கல் செய்த 2002-2003 பட்ஜெட்டில் நிறைய வாபஸ் அறிவிப்புகள் வெளியிடப்பட்டதால், அது ‘ரோல்பேக் பட்ஜெட்’ என அழைக்கப்பட்டது. கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் அதை ‘100 ஆண்டுகளில் இல்லாத பட்ஜெட்’ என்று வர்ணித்தார்.