பாராளுமன்றத்தில் இன்று 2022-23 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.இதையொடடி மத்திய நிதியமைச்சகத்திற்கு காலை 8.45 மணிக்கு அவர் வருகை தந்தார்.இதேபோல் நிதித்துறை இணை மந்திரிகள் பங்கஜ் சவுத்ரி மற்றும் பகவத் காரத் ஆகியோர் நிதி அமைச்சகத்திற்கு வருகை தந்தனர்.
இதைத் தொடர்ந்து சம்பிரதாய முறைப்படி பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணை மந்திரிகள் மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் சந்தித்தனர். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பின்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை தந்தார்.
தொடர்ந்து 2வது முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
சரியாக 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையைத் தொடங்கிய அமைச்சர் 12.30 மணிக்கு நிறைவு செய்தார்.
* பட்டை தீட்டப்பட்ட வைரங்களுக்கான இறக்குமதி வரி 5 சதவீதமாக குறைப்பு
* குடைக்கான இறக்குமதி வரி 20 சதவீதம் ஆக உயர்வு
* ஆடைதயாரிப்பு தோல்பொருட்கள் தயாரிப்பு உபகரணங்களுக்கு வரிகுறைப்பு
* மொபைல் சார்ஜர், கேமரா லென்ஸ் உள்ளிட்டவற்றின் உதிரிபாகங்களுக்கு இறக்குமதி வரி சலுகை
* தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் இந்த ஆண்டும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
* அரசு ஊழியர்களுக்கான வரிச்சலுகை 14% ஆக உயர்வு
விலை குறையவுள்ள பொருட்கள்:
ஆடைகள்,ரத்தினக் கற்கள் மற்றும் வைரங்கள்,செல்லுலார் மொபைல் போன்களுக்கான கேமரா லென்ஸ்,மொபைல் போன் சார்ஜர்கள்,உறைந்த சிப்பிகள்,உறைந்த கடம்பா மீன்கள் ,பெருங்காயம்,கோகோ பீன்ஸ்,மெத்தில் ஆல்கஹால்,அசிட்டிக் அமிலம்,பெட்ரோலியப் பொருட்களுக்குத் தேவையான ரசாயனங்கள்,எஃகு ஸ்கிராப்கள்
விலை உயரவுள்ள பொருட்கள்:
குடைகள்,கவரிங் நகைகள்,ஒலிபெருக்கிகள்,ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்போன்கள்,ஸ்மார்ட் மீட்டர்,சூரிய செல்கள்,எக்ஸ்ரே இயந்திரங்கள்,மின்னணு பொம்மைகளின் பாகங்கள்.
நடப்பாண்டின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் குறித்த கேள்விகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பதில் அளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:-
கொரோனாவால் பாதிப்பை சந்தித்த அனைத்து துறைகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுற்றுலா மட்டும் உணவு சேவை துறைகள் அதிக சிரமத்திற்கு ஆளானதால் அவசர கால கடனுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் பிட் காயின் போன்றவை டிஜிட்டல் கரன்சி அல்ல.
வரி வசூல் குறிக்கோள்கள் சாத்தியமாகும் அளவிலேயே கணக்கிடப்பட்டுள்ளன. எல்.ஐ.சி பங்குகளை மதிப்பிடும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த பட்ஜெட்டிலும், இந்த பட்ஜெட்டிலும் ஒரு ரூபாய் கூட வரி உயர்த்தப்படவில்லை.கொரோனா காலத்தில் அதிக சவால்களை எதிர்கொண்ட போதும் வரியை உயர்த்தவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
பாராளுமன்றத்தில் இன்று 2022-23 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 2-வது முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தாக்கலில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “மிகவும் சிறப்பான பட்ஜெட்டை நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் அடுத்த 100 ஆண்டுகளுக்கான பட்ஜெட். உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை இந்த பட்ஜெட் ஊக்குவிக்கும். சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் பல தரப்பில் இருந்தும் வரவேற்பை பெற்றுள்ளது. விவசாயிகள், ஏழைகள் மத்திய பட்ஜெட்டால் பயன்பெறுவர். உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கங்கை நதிக்கரையில் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும் என்ற அறிவிப்பு சிறப்பானது. விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதார விலை இந்த பட்ஜெட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தை வலுப்படுத்துவதோடு, புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பட்ஜெட் இது. இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் பயனடைவார்கள்.
நாட்டிலேயே முதன்முறையாக, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு போன்ற பகுதிகளுக்கு ‘பர்வத் மாலா’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது மலைகளில் நவீன போக்குவரத்து மற்றும் இணைப்பு முறையை எளிதாக்கும். இது எல்லையோர கிராமங்களுக்கு வலு சேர்க்கும்” என்று பிரதமர் மோடி கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘ஜீரோ பட்ஜெட்’ என விமர்சித்த ராகுல்காந்திக்கு நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்தார். இதுதொடர்பாக பேசிய அவர், “டுவிட்டரில் விரைவான விமர்சனம் செய்பவர்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன். பட்ஜெட் தொடர்பாக வெளியாகும் விமர்சனங்களை ஏற்கத் தயாராக இருக்கிறேன். சொந்த வேலையையே செய்ய தெரியாத இந்தியாவின் பழமையான அரசியல் கட்சியின் தலைவரின் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.