இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்றாக நீக்க கோரி பொதுமக்கள் கையெழுத்து போராட்டம் ஒன்றினை முல்லைத்தீவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று (03) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் தொடக்கி வைத்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தினார்
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணி தலைவர் கி.சேயோன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் ஆகியோர் கலந்து கொண்டு கையெழுத்து போராட்டத்தினை தொடக்கி வைத்துள்ளார்கள்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்க கோரிய கையெழுத்து போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்..
இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டம் மிக மோசமான சட்டமாக இருக்கின்றது. 6 மாத காலத்திற்கு தற்காலிக சட்டமாக கொண்டுவரப்பட்டது 42 ஆண்டுகளாக இருக்கின்றது. விசேடமாக தமிழ் இளைஞர்களை நசுக்குகின்ற ஒடுக்கி ஆழ்கின்ற சட்டமாக சர்வதேச விழுமியங்கள் எல்லாவற்றையும் புறந்தள்ளி செயற்படும் சட்டமாக இருக்கின்றது.
அது நீக்கப்படும் என்று இலங்கை அரசு தெளிவாக சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதி கொடுத்துள்ளது. அவ்வாறு நீக்குவதற்கான முயற்சியும் சென்ற அரசாங்க காலத்தில் இடம்பெற்றுள்ளது. அது முழுமை பெறவில்லை. ஆனால் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தினை சீர்த்திருத்துகின்றோம் என்று சொல்லி எந்த வித உப்புச்சப்பில்லாத ஒரு சீர்த்திருத்தமாக அறிவிக்கப்படுகின்ற ஒரு வர்த்தமானி பிரசுரம் வந்துள்ளது.
அது நடைமுறையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் அமுலில் எந்த மாற்றத்தினையும் செய்யப் போவதில்லை. ஆகவே சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு விசேடமாக ஜரோப்பிய ஒன்றியத்தினை ஏமாற்றுவதற்கும் எதிர்வரும் 28 ஆம் திகதி ஜக்கியநாடுகள் மனிதஉரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாக இருக்கின்றது அவர்களையும் ஏமாற்றலாம் என்ற எண்ணத்தில் இது செய்யப்படுகின்றது அவர்கள் எல்லாருக்கும் விளக்கமாக விடையஙங்களை அறிவித்துள்ளோம்.
இந்த தருணத்தில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்குவோம் என்று அரசாங்கம் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் அந்த பயங்கரவாத தடுப்பு சட்டம் முற்று முழுதாக நீக்கப்படவேண்டும் என்று எங்கள் மக்கள் நேரடியாகவே கையெழுத்திட்டு கோருகின்ற ஆவணத்தினை கையெழுத்து இட்டு ஆரம்பித்து வைக்கின்றோம்.
இது எட்டு மாவட்டங்களிலும் மக்களிடத்தில் வீடு வீடாக சென்று வீதி வீதியாக சென்று மக்களின் கையெழுத்து வாங்கி இன்று ஆரம்பித்து வைக்கின்றோம். தமிழரசு கட்சியின் இளைஞர் அணி கையெழுத்து போராட்டத்தினை மக்களிடத்தில் முன்கொண்டு செல்லவுள்ளது.
யாழில் நடைபெறுகின்ற மீனவர்களின் போராட்டத்தினை கருத்தில் கொண்டு அந்த போராட்டத்திற்கு ஒரு முடிவு வந்த பின்னர் கையெழுத்து போராட்டத்தினை முழு வீச்சாக செயற்படுத்துவோம் என்றும் பயங்கரவாத தடுப்பு சட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
மக்களிடத்தில் கையெழுத்து சேகரித்து அனுப்பவுள்ள கடிதத்தில் 1979 ஆம் ஆணடின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு சட்டமே (தற்காலிகமாக) எமது சட்டப்புத்தகங்களில் காணப்படும் மிகக்கொடூரமான சட்டமாக தற்போதும் சட்டப்புத்தகங்களில் காணப்படுகின்றது.
1979 ஆம் ஆண்டு தற்காலிக சட்டமாக நிறைவேற்றப்பட்ட இச்சட்டம் அதன் தலைப்பில் தெரிவிப்பது போல தற்காலிகமாக 6 மாத காலத்திற்கு மட்டும் செல்லுபடியாக வேண்டியது 42 ஆண்டு காலங்கள் நீடித்து அநீதியை விளைவித்தும் அநேகருக்கு துன்பத்தினையும் கஸ்டத்தினையுமே வழங்கியுள்ளது.
இந்த சட்டத்தின் விதிகள் நமது குற்றவியல் சட்டத்தின் அடிப்படை மூலாதாரங்களுக்கு எதிரான திசையில் இயங்குகின்றன. உண்மையில் விசாரணை நிலுவையில் உள்ள குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் குற்றமற்றவர் என்ற அனுமானமும் கூட எமது சட்டம் காவல் துறையினரிடம் வழங்கப்படும் எந்த வாக்கு மூலத்தையும் கண்டு கொள்வதில்லை. இது நீதி மன்றத்தினால் சாட்சியாக ஏற்றுக்கொள்ளப்படாது.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் மாத்திரமே விதிவிலக்காக ஒரு உதவிக் காவல் அத்தியட்சகர் பதவிக்கு குறையாத ஒரு காவல்துறை அதிகாரியிடம் வழங்கப்படும் வாக்கு மூலம் குற்ற ஒப்புதலாக ஏற்றுக்கொள்ளப்படும். இருந்த போதிலும் அது ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும் இந்த விதி மட்டுமே பல தவறான தீர்ப்புக்களுக்கு வழிவகுத்தது மட்டுமல்லாது காவல்துறையின் விசாரணை திறமை மழுங்கடித்தது என்பதனை சொல்ல தேவையில்லை.
உண்மையான குற்றவாளி இன்னும் சுதந்திரமாக இருக்கும் அதேவேளையில் ஒரு குறிப்பிட்ட குற்றம் தீர்க்கப்பட்டு விட்டதாக கூறுவதற்கு ஒரு தீர்ப்பினை வலுவாக்க ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கப்படுவதே போதுமானது என்பதாலும் இது எதிர் விளைவாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒப்புதல் வாக்கு மூலங்கள் தடுப்பு காவல் மற்றும் பிணை இல்லாமல் காவலில் வைப்பதற்கான விதிகள் ஆகியவை காவல்துறை சித்திரவதை நிகழ்வுகளை அதிகரிக்க செய்துள்ளது. இக் காலகட்டத்தில் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகள் தொர்பான பிரசுரிக்கப்பட்ட தீர்ப்புக்களை அவதானித்தால் இதனை கண்டு கொள்ளமுடியும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி அதற்கு பதிலாக சர்வதேச மனித உரிமைகள் தர நிலைகளுக்கு அமைவாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டு வருவதற்கு இலங்கை உறுதியளித்திருந்தது.
2018 இல் ஒரு சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்ட போது அது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இருப்பினும் பயங்கரவாத தடைச்சட்டத்ததை சீர்திருத்தம் செய்வதற்காக 2022 ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி அதன் திருத்திற்கான சட்ட மூலத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முன்மொழியப்பட்ட திருத்தம் நடைமுறையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் அமுலாக்கங்களிலும் அதைத் தொடர்ந்து வரும் கடுமையான விளைவுகளிலும் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
இந்த பின்னணியில் நாம் பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதற்காக தாம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க வலியுறுத்தி சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-