இலங்கை கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகள் ரூபா 52 இலட்சத்து 20 ஆயிரத்து 500 (ரூ. 5,220,500) இற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், காரைநகரில் வைத்து 135 இந்தியப் படகுகள் நேற்று திங்கட்கிழமை (07) ஏலத்தில் விடப்பட்டன.
இதன்போது 135 படகுகளும் 52 லட்சத்து 20 ஆயிரத்து 500 ரூபாவிற்கு ஏலம் விடப்பட்டன. இவற்றில் உச்சபட்சமாக ஒரு படகு 13 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.
ஏலத்தின் நிறைவில் ஏலம் கேட்டவர்களால் மொத்தமாக 16 லட்சத்து 63 ஆயிரம் ரூபா பணம் செலுத்தப்பட்டுள்ளதுடன் மிகுதிப் பணமும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் செலுத்தப்பட்டு படகுகள் அங்கிருந்து எடுத்து செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகுகள் காரைநகர் கடற்படைத் தளத்தில் 135 படகுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு தடுத்த வைத்திருந்த படகுகளே நேற்று ஏலத்தில் விடப்பட்டன.
கொழும்பில் இருந்து வருகை தந்த கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளின் முன்னிலையில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமான ஏலத்திற்கான பணிகள் யாவும் பிற்பகல் 2.00 மணி வரை இடம்பெற்றன.
இதேவேளை, நேற்றைய தினம் (07) யாழ்ப்பாணம், நெடுந்தீவு பகுதியில் கடற்படையினரால், இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 11 பேர் 3 படகுகளுடன் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.