எஃப்.ஐ.ஆர்’ பட வியாபாரம் தொடர்பான வதந்திகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.
மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள படம் ‘எஃப்.ஐ.ஆர்’. இதில் கெளதம் மேனன், கெளரவ் நாராயணன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் விஷ்ணு விஷாலுடன் நடித்துள்ளனர். பிப்ரவரி 11-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தினை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.
இந்தப் படத்தின் தொலைக்காட்சி, இசை, ஓடிடி, இந்தி உள்ளிட்ட அனைத்து உரிமங்களையும் வெளியீட்டுக்கு முன்பாகவே விற்றுவிட்டார் விஷ்ணு விஷால். இதன் மூலமே விஷ்ணு விஷாலுக்கு லாபம் கிடைத்துவிட்டது எனவும், திரையரங்கின் மூலம் வரும் பணம் அவருக்குக் கூடுதல் லாபம் தான் என்று தகவல் வெளியானது.
20 கோடி ரூபாய்க்கு அனைத்து உரிமங்களையும் விஷ்ணு விஷால் விற்றுவிட்டார் என்று இன்று (பிப்ரவரி 8) காலை முதலே சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. இதனை முன்வைத்து பலரும் விஷ்ணு விஷாலின் படங்களில் இது பெரிய வியாபாரம் என்று குறிப்பிட்டார்கள்.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பதிவில் “‘எஃப்.ஐ.ஆர்’ வியாபாரம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் வெளியாகி உள்ளன. ஆமாம், ‘எஃப்.ஐ.ஆர்’ படம் வெளியாகும் முன்பே திரையரங்க வெளியீடு தவிர்த்து இதர உரிமங்கள் விற்பனையின் மூலம் 22 கோடி ரூபாய் ஈட்டியுள்ளோம். நடிகர் விஷ்ணு விஷாலுக்காக நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கண்டிப்பாக மக்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். இப்படிக்கு தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்” என்று குறிப்பிட்டுள்ளார்.