பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்ற கர்நாடக மாநில அரசின் உத்தரவு ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்திலமான தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் குந்தாப்புராவில் உள்ள ஒரு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வரக்கூடாது என்று அக்கல்லூரி முதல்வர் தடை விதித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினார். இதனிடையே, மாணவிகள் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மத மாணவர்கள் காவி துண்டு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிக்கு அனைவரும் சீருடை மட்டும் அணிந்து வர வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாநில அரசின் ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முஸ்லிம் மாணவிகள் வழக்கு தொடர்ந்தனர்.
இதனிடையே, கர்நாடக மாநிலம் முழுவதும் மாணவிகள் பர்தா அணி வருவதற்கு எதிரான போராட்டம் அதிகரிக்க தொடங்கியது. பாகல்கோட்டை, தாவணகெரே, சிக்கமகளூரு, மண்டியா, விஜயாப்புரா, குடகு, பீதர், துமகூரு, உப்பள்ளி, சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்களிலும் பர்தா, காவி உடை அணிந்து வரும் விவகாரம் தொடர்பாக மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் கூறியுள்ளதாவது:”கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது.”
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.