பயங்கரவாத தடைச்சட்ட (தற்காலிக ஏற்பாடுகள்) புதிய திருத்தச் சட்ட மூலம் சர்வதேசத்தை திருப்திப்படுத்துவதற்கானதல்லவென நீதி அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி நீதித்துறை சுயாதீனம் தொடர்பில் அனைவரும் ஒரே மனப்பான்மையுடன் செயல்பட வேண்டுமென்றும் அவர் சபையில் கேட்டுக்கொண்டார்.
மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் சில்லறைத்தனமானவை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். எனினும் அவர்களது நல்லாட்சி அரசாங்கத்தில் ஏன் அதனை மேற்கொள்ளவில்லையென நான் கேட்க விரும்புகின்றேன் என்றும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நீதித்துறை திருத்தச் சட்ட மூலங்கள் மீதான விவாதத்தின் இறுதியில் பதிலளித்து உரையாற்றிய நீதியமைச்சர், தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது: பயங்கரவாத தடைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் போதுமானதல்ல என எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
எமது அரசாங்கம் 48 வருடங்களுக்கு பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் விசேட குழு அமைத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தக் குழுவிடம் ஆலோசனைகளை முன்வைக்கவும் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் நாட்டின் சட்டங்கள் மற்றும் தனியார் சுதந்திரத்தைப் பலப்படுத்துவதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளன. ஒருபோதும் அவை சர்வதேசத்தை திருத்திப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட விடயமல்ல. அரசியலமைப்பின் மூலம் அரசாங்கத்திற்கு அதற்கான அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.