யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் மாவட்டத்திலுள்ள ஏனைய வைத்தியசாலை ஊழியர்கள் இணைந்து தொழிற்சங்க போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்தனர்.
கடந்த 2006 ஆண்டிலிருந்து சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இன்றைய தினம் தொடர்ச்சியாக 6-வது நாளாக குறித்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 15 வகையான சுகாதார தொழிற்சங்க பணியாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
தாதியர் சங்கம் உள்ளிட்ட 15 சங்கங்களை சேர்ந்த 600ற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையின் பிரதான வீதியில் ஊர்வலமாக சென்று போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தமது கோரிக்கைகளை ஜனாதிபதி, பிரதமர் கூட செவி சாய்க்காது மாற்றாந்தாய் பிள்ளைகளைப் போல தம்மை பார்ப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறான நிலைமை தொடர்ந்தால் தமது போராட்டம் நீடிக்கும் என இதன்போது குறிப்பிட்டனர்.