மோடி ஆட்சியில் ரூ.5¼ லட்சம் கோடி வங்கி மோசடி நடந்துள்ளதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கி உள்பட 28 வங்கிகளை ரூ.22 ஆயிரத்து 842 கோடி மோசடி செய்ததாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஏ.பி.ஜி. கப்பல் கட்டும் தள நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்தநிலையில், இதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மோடி ஆட்சியில் இதுவரை ரூ.5 லட்சத்து 35 ஆயிரம் கோடி வங்கி மோசடிகள் நடந்துள்ளன. கொள்ளையும், மோசடியும் நிறைந்த இந்த நாட்கள்தான், மோடியின் நண்பர்களுக்கு மட்டும் நல்ல நாட்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா கூறியதாவது:-
மோடி ஆட்சியில் 7 ஆண்டுகளில் நடந்த ரூ.5 லட்சத்து 35 ஆயிரம் கோடி வங்கி மோசடி, வங்கி துறையை சீரழித்துள்ளது. வங்கி மோசடியாளர்களுக்காக ‘கொள்ளையடித்து தப்பிக்கும்’ திட்டத்தை மோடி அரசு நடத்தி வருகிறது. ஆளுங்கட்சியுடன் இந்த மோசடியாளர்களுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.