கிணற்றுக்குள் விழுந்து 13 பெண்கள் பலி

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் நிபுவா நவ்ரங்யா என்ற கிராமத்தில் நேற்று இரவு நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது திருமணத்திற்கு வந்திருந்த பெண்கள் வீட்டிற்கு பின்னால் இருந்த இரும்பு வலையால் ஆன கான்கீரிட்டால் மூடப்பட்டிருந்த கிணற்றின் மேல் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

ஏறக்குறைய 22-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் அந்த கிணற்றின் மீது நின்று பேசிக்கொண்டிருந்த போது பாரம் தாங்காமல் கிணற்றின் மேல் தளம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் கிணற்றின் மேல் நின்று கொண்டிருந்த பெண்கள் ஆழமான கிணற்றுக்குள் விழுந்தனர்.

இதையடுத்து அருகில் நின்றுகொண்டிருந்தவர்கள் சம்பவம் குறித்து தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கிராம மக்கள் மற்றும் தீயணைப்பு மீட்புபடையினரின் முயற்சியால் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

ஆனாலும் கிணற்றுக்குள் விழுந்ததில் சிறுமிகள் உட்பட 13 பெண்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ‘உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் நடந்த விபத்து நெஞ்சை உலுக்குகிறது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, தலா ரூ. 2 லட்சமும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக அறிவித்துள்ளார். மேலும் மாவட்ட மாஜிஸ்திரேட் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

Related posts